உத்தரகாண்டில் நிலச்சரிவு – 570 வீடுகள் பாதிப்பு
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு.
இந்நிலையில், இந்தப் பகுதியில் திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏறத்தாழ 570 வீடுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.
தகவலறிந்த முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
பாதுகாப்பற்ற சூழல் காரணமாக 60 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
மேலும், இந்த நிலச்சரிவால் 3 ஆயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதல் மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.