Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி – முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஜா- டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னர் 10 ரன் எடுத்திருந்த போட்டி நோர்க்யா பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து கவாஜா – மார்னஸ் லாபுசாக்னே ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதம் அடித்தனர்.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடி வந்த மார்னஸ் லாபுசாக்னே 79 ரன்கள் எடுத்த நிலையில் நோர்க்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்மித் களமிறங்கினார். அப்போது வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. ஆனால் வெளிச்சத்தில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் முதல் நாள் ஆட்டம் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

இன்றைய ஆட்டம் அரை மணி நேரம் முன்னதாக தொடங்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 0 ரன்னிலும் கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.