Tamilசெய்திகள்

அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம்?

அமெரிக்க நாட்டில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர்.

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக கூறப்பட்டது. ஒருவேளை, இந்த விவகாரம் வெளியே கசிந்து விட்டால், அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அவர்களுக்கு டிரம்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அமெரிக்க தேர்தல் நிதி சட்டத்தை மைக்கேல் கோஹன் மீறியதாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, தன்மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை மைக்கேல் கோஹன் ஒப்புக்கொண்டார்.

அப்போது அவர், “ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப் தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே பகிரங்கப்படுத்திவிடுவோம் என்று சொன்ன 2 பெண்களின் வாய்களை அடைப்பதற்காக, அவர்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் ( ஒரு டாலர் சுமார் ரூ.72) கொடுத்தேன். வேட்பாளரின் உத்தரவின்பேரில் நான் இதைச் செய்தேன்” என கூறினார்.

இந்த விவகாரத்தில் இப்போது டிரம்ப் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் நியூயார்க் கோர்ட்டில் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளனர். அந்த ஆவணத்தில், அவர்கள் முதல்முறையாக டிரம்ப் கூறித்தான், மைக்கேல் கோஹன் தேர்தல் நிதி சட்டத்தை மீறி உள்ளார் என நேரடியாக கூறி உள்ளனர்.

இது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ (கண்டன தீர்மானம்) கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி உள்ளது. எனவே அந்த சபையில் தன் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ‘வெஸ்ட் விங்’ (ஜனாதிபதி அலுவலகம்) வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், “டிரம்ப் சொல்லித்தான் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்களுக்கு நிதி தந்து சட்டத்தை மீறியதாக மைக்கேல் கோஹன் கூறிய விவகாரத்தில் மட்டுமே டிரம்ப் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வர வாய்ப்பு உள்ளது” என கூறின.

இதில், ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறிய பின்னர், அவரை சிறைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர்.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் தலைவர் பதவியை ஏற்க உள்ள ஜெர்ரி நாட்லர் கருத்து தெரிவிக்கையில், “டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்” என குறிப்பிட்டார்.

இதே போன்று ஜனநாயக கட்சி செனட் சபை எம்.பி. கிறிஸ் கூன்ஸ், “ டிரம்ப் பதவி முடிந்து வெளியே சென்ற பின்னர் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தன்மீது பிரதிநிதிகள் சபையில் ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட்டாலும், செனட் சபையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் நம்புவதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *