தெலுங்கானாவில் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு
ஆந்திராவை இரண்டாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. அவர் தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயார் ஆனார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் கடந்த 7-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தெலுங்கானா ஜன சமிதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது முதல்வராக சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த கூட்டத்தின்போது, பதவியேற்பு விழா தேதியும் இறுதி செய்யப்பட உள்ளது.
காஜ்வெல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டியை 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமா ராவ், மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.