அஜித்தை சந்தித்த நடிகர் அர்ஜுன்! – ‘மங்காத்தா 2’ தொடங்குகிறதா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படம் பெரிய வெற்றி பெற்றது. இது அஜித்தின் 50-வது படமாக உருவாகி வெளியானது. தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வந்து வரவேற்பை பெற்று வருவதால் மங்காத்தா 2-ம் பாகமும் உருவாக வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
வெங்கட் பிரபுவிடமும் இந்த கோரிக்கையை அவர்கள் எழுப்பியபோது, ”மங்காத்தா 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டேன். அஜித்குமார் எப்போது அழைத்தாலும் மங்காத்தா 2 படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்திருந்தார். அஜித்குமார் தற்போது துணிவு படத்தை முடித்து விட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார்.
இந்நிலையில் அஜித்குமாரை நடிகர் அர்ஜுன் திடீரென்று சந்தித்து பேசியுளார். இருவரும் சந்தித்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பை தொடர்ந்து அஜித், அர்ஜுன் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது உறுதியாகி உள்ளது. அது விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலா? அல்லது மங்காத்தா 2-ம் பாகத்திலா என்பது விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.