கும்பகோணத்தில் இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 38). இவர் 2017ம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகரச் செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மாலதி, மகன் இனியன் ஆகியோருடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் வெளியே திடீரென பயங்கர சத்தம் கேட்டது. இதனால் சக்கரபாணி எழுந்து வெளியே சென்று பார்த்தபோது வாசலில், பெட்ரோல் பாட்டில், திரியுடன் உடைந்த நிலையில் கிடந்தது. இது குறித்து சக்கரபாணி கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் கும்பகோண கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் சக்கரபாணி வீட்டிற்கு குவிந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.