Tamilசெய்திகள்

தமிழகத்தில் தொடரும் மழை – 10 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய கடற்கரை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் அநேக இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்து விடுகிறது.

இன்று காலையிலும் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. ஆனாலும் இடை இடையே வானத்தில் இருள் சூழ்ந்து மழை பெய்கிறது. இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (புதன்கிழமை) உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் 10-ந்தேதி முதல் 11-ந்தேதி ஆகிய இரு நாட்களும் கன மழையும், ஒருசில மாவட்டங்களில் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் பல மாவட்டங்களில் கலெக்டர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கலெக்டர்கள் உஷார் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.