‘காந்தாரா’ படத்தை பார்த்து ரசித்து பாராட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் ரூ.47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
இது குறித்து தமது டுவிட்டர் பதிவில், கந்தாரா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.