திமுக பிரமுகரின் குஷ்பு பற்றிய ஆபாசமான பேச்சு – மன்னிப்பு கேட்ட கனிமொழி
சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
டுவிட்டரில் குஷ்பு, ஆண்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தால் அது அவர்கள் வளர்ந்த வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள், தங்களை கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லி கொள்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுதான் புதிய திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் பேசியிருந்தாலும், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு போதும் இந்த நடத்தையை ஏற்க முடியாது. இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தனது தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறி உள்ளார்.