Tamilசெய்திகள்

திருப்பதி கோவில் உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.94 ஆயிரம் திருட்டு – வங்கி ஊழியர் கைது

திருப்பதி அடுத்த சந்திரகிரியை சேர்ந்தவர் திலீப். இவர் அங்குள்ள வங்கி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். வங்கியில் வேலை செய்யும் 50 ஊழியர்கள் 1 ஷிப்ட்டுக்கு 25 பேர் வீதம் 2 ஷிப்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திலீப் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டு வந்தார். பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது முக கவசத்தில் ரூ.94 ஆயிரத்தை மறைத்து வைத்து எடுத்துச் சென்றார். திலீப் மீது சந்தேகம் அடைந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது திலீப் முக கவசத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.94 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 47 ரூ.2000 நோட்டுகளை மறைத்து வைத்து எடுத்து சென்றார்.

இதையடுத்து திலீப்பை பிடித்து திருமலை 1 டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப்பை கைது செய்தனர். திலீப் ஏற்கனவே லட்டு கவுண்டரில் வேலை செய்யும் போது டோக்கன்களை திருடி பக்தர்களுக்கு விற்பனை செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.