காங்கிரஸ் கட்சி ஒரு நாடக கம்பெனி ஆகும் – கர்நாடக அமைச்சர் அசோக் கிண்டல்
பெங்களூரு விதானசவுதா வில் வருவாய்த்துறை மந்திரி அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி மூழ்கி கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு பஞ்சரான பஸ் ஆகும். பஞ்சரான அந்த பஸ்சுக்கு 80 வயதான மல்லிகார்ஜுன கார்கேவை டிரைவர் சீட்டில் அமர்த்தி உள்ளனர். டிரைவர் சீட்டுக்கு பின்னால் சோனியா காந்தி இருப்பார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், அவர் ஒரு ரிமோட் கன்ட்ரோல் தான்.
காங்கிரஸ் கட்சி ஒரு நாடக கம்பெனி ஆகும். ராகுல்காந்தி, சித்தராமையா மக்களிடம் நாடகமாடுகிறார்கள். ராகுல்காந்தி பாதயாத்திரை என்ற பெயரில் நாடகமாடுகிறார். சட்டசபை தேர்தலுக்கு சித்தராமையா சொகுசு பஸ்சில் நாடகமாடுவதற்கு செல்ல இருக்கிறார்.
60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியினர் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு என்ன செய்தார்கள்?. கர்நாடகத்தில் அந்த சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிகரித்துள்ளார். இடஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி நாகமோகனதாஸ் தலைமையில் குழுவை அமைத்தது சித்தராமையா இல்லை. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது தான் அந்த குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் சிபாரிசுபடி தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் முன்னுரிமை அளிக்கும் விதமாக பா.ஜனதா அரசு இடஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.