Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா போராடி தோல்வி

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்களும் விளாசினர். இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8 ரன்களில் துவக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. அதாவது ஷூப்மான் கில் 3 ரன்னிலும், கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களும் சேர்த்தனர்.

அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். போதுமான ரன்ரேட் இல்லாமல் தவித்த நிலையில், சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாக்கூர் ஜோடி நம்பிக்கை அளித்தது. நெருக்கடிக்கு மத்தியில் அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்த ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இதனால் ரன்ரேட் உயர்ந்தது. எனினும் இலக்கை எட்ட முடியவில்லை. மறுமுனையில் ஆடிய ஷர்துல் தாக்கூர் 33 ரன்களில் அவுட் ஆனதையடுத்து, ஆட்டத்தின் போக்கு மாறியது. குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் வெளியேறினார். ஆவேஷ் கான் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரை ஷாம்சி வீசினார். முதல் பந்து வைடு ஆனது. இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரவி பிஷ்னோய் சிக்சர் அடித்தார். இரண்டாவது மற்றும் 3வது பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ரன் இல்லை. 5வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். கடைசி ஓவரில் மொத்தம் 20 ரன்கள் அடித்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் மொத்தம் 86 ரன்கள் குவித்தார்.

கடைசி வரை போராடிய இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி 9ம் தேதி ராஞ்சியில் நடக்கிறது.