கோவையில் சட்டம் ஒழுங்கு கெடுவதை முதல்-அமைச்சர் அனுமதிக்க கூடாது – வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு
கோவையில் பா.ஜ.க அலுவலகம் உள்பட 7 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தது. இந்த நிலையில் கோவை பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாநகர பகுதிகளில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது. பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடு, கடைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடந்து இருப்பதால் 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றோம். சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து கட்சி தலைமைக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம்.
கோவை மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பயங்காரவாத தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இங்கு நடைபெறும் சிறு, சிறு பிரச்சினையும் பெரிய விளைவை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் யார் செயல்பாட்டாலும் தயவுதட்சனம் பார்க்காமல், சமரசம் செய்து கொள்ளாமல் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியை குலைத்து விட்டு வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
கோவை நகரம் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு கெடுவதை முதல்-அமைச்சர் அனுமதிக்க கூடாது. நாட்டின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமாதிரி பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடக்கூடாது. அரசியல் காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை ஆதாரம் இருந்தும் கைது செய்ய ஏன் தாமதம்? இவ்வளவு சம்பவம் நடந்தும் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்க இதற்கு வேறு அரசியல் அழுத்தம் இருக்கிறதா?. நாட்டிற்கு எதிராக இருப்பவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க நினைப்பவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.