
விசாலம்
ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஸ்ரீ ராமரே சூரியனைக் குறித்து வந்தனம் செய்த உயர்ந்த ஸ்லோகம், இது. இதிலிருந்தே சூரியனின் சக்தி நமக்கு விளங்குகிறது. சூரிய சக்தி இல்லை என்றால் பூமியே அழிந்துவிடும். உலகமே அதனால் தான் இயங்குகிறது. பூமி, சூரியனை நோக்கி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. காலையில் சூரிய நமஸ்காரம் அல்லது பிராணாயாமப் பயிற்சி போன்றவை கிழக்கைப் பார்த்து அமர்ந்து செய்வது உத்தமம். ஏன் என்றால் சூரிய உதய சக்தியில் அறிவும் கூர்மை ஆகிறதாம்.
வீட்டின் வாசல்களுக்கும் தனிச் சிறப்பு உண்டு. வாசல்கள், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் என்று நான்கு
வகைப்படும். இந்த நாலு வாசல்களிலும் முதன்மை வகிக்கும் வாசல், கிழக்கு வாசல்தான். சூரிய ஒளி முதலில் கிழக்கில் வீச, பின் தென் கிழக்கில் சமையலறையிலும் அது பட, சிறப்புத்தான். வீட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் இந்தக் கிழக்கு வாசல், சுமூகமாகத் தீர்த்து வைத்து விடும். இது வீட்டிற்கு யோகம் தரும் வாசல். அதிலும் நுழையும் இடம் வடகிழக்காக இருந்துவிட்டால், அமோகம்தான். கிழக்கை நோக்கிய வடகிழக்கு வாசல் அமைய, ஜாதகத்திலும் நான்காவது ஸ்தானம் சிறப்பாக இருக்க வேண்டும்.
தென் கிழக்குப் பகுதி, அக்னி பகுதி. அந்த இடத்தில் நுழைவு entrance door அமைக்கக் கூடாது. அப்படி அமைந்தால் பணச் செலவு, கடன் தொல்லை என வரும். தனிப்பட்ட செல்வாக்கு இருக்காது. புகழ் குன்றும். கிழக்கு அல்லது வடகிழக்கில் வாசல் வைத்தால் மிகச் சிறப்பாக வாழ்வு வளம் பெறும்.
கிழக்குத் திசைக்கு அதிபதி இந்திரன் என்று நாம் முன்பாகவே பார்த்தோம். இந்திரன், ராஜாவாக எல்லா சௌகரியங்களுடன் வாழ்பவர். அவர் திசையில் சுபயோகங்கள் நிச்சயம் கிடைக்கும். சூரிய வெளிச்சம் வரும்படி அதிக சன்னல்களுடன் வைத்துக் கட்ட, நல்ல பலன் பெறலாம். காலை சூரிய ஒளியில் விட்டமின் டி சக்தி கிடைக்கிறது. நாம் முன்பு தலைவாசலைப் பற்றியும் பார்த்தோம்.
தெற்கு நோக்கிய வீட்டிற்கு வடக்கிலிருந்து வரும் காற்று, நல்ல பலனளிக்கும். இதேபோல் மேற்கு நோக்கிய வீட்டிற்கு கிழக்கிலிருந்து வரும் காற்று, நல்ல பலன் தரும்.
வெளிவாயில் கதவுகளுக்கு அநேகமாக கருப்பு நிற வர்ணம் அடிப்பார்கள். இந்த வர்ணத்தைத் தவிர்ப்பது நல்லது. தலைவாயில் கதவுகள் உள் நோக்கி திறக்கப்படும்படி அமைக்க வேண்டும். வீட்டுவாயில் நேராக உட்பகுதியில் நீர்த்தொட்டியோ, கிணறோ, பெரிய தூண்களோ, மாடிப்படிகளோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Nov 03, 2009
* Do not use semicolon(;)