
விசாலம்
பிரும்மஸ்தானம் என்ற பெயரைப் படித்தாலே அதன் புனிதத் தன்மையும் அது எவ்வளவு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும் நமக்குப் புலப்படுகிறது. பிரும்மா தோன்றிய இடம், மஹாவிஷ்ணுவின் நாபிக் கமலம்.... பிரும்மா சிருஷ்டி கர்த்தாவானார்.
நாபி என்றால் தொப்புள்; கமலம் என்றால் தாமரை; பிரும்மாவின் சிருஷ்டியில் உலகம் இயங்க ஆரம்பித்தது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் நம் உடலில் நடுப் பாகம் நாபி.. அதுவேதான் centre of gravity என்று சொல்லப்படும் புவி ஈர்ப்புச் சக்தி. நாம் நடக்கும் போது, சிறிது அதில் பிசகானாலும் நாம் கீழே விழுந்து விடுகிறோம். எந்தப் பொருளுக்கும் இந்தச் சக்தி உண்டு. சர்க்கஸில் தட்டைச் சுழற்றுவதும் ஒரு கயிற்றில் நடப்பதும் இதைச் சாக்கிரதையாகக் கையாளுவாதால் தான்.
நம் இதயம் உடலில் மிக முக்கியமான ஒன்று, அதன் துடிப்பில் தான் நம் ஜீவன் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் எங்கேயாவது புகைச் சூழலில் மாட்டிக்கொண்டால் மூச்சு திணறுகிறது. அதேபோல் தண்ணீரில் மூழ்கினாலும் மூச்சு விடுவது சிரமமாகப் போய்விடுகிறது. அளவுக்கு மீறிக் காற்று உள்ளே போனாலும் அவஸ்தை தான். காற்று குறைந்தால் கேட்கவே வேண்டாம். அங்கு ஸ்வாசிக்கச் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால் எல்லாம் சம அளவோடு இருத்தல் மிக அவசியமாகிறது. அதில் பலதரப்பட்ட எண்ணங்கள், கவலைகள் சூழச் சூழ டென்சன் உண்டாகி, அதனால் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இதைத் தடுக்க நாம் இதயத்தை அழுத்தம் இல்லாத சூழநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். கழைக் கூத்தாடியைப் பார்த்திருப்பீர்கள். அவன் ஒரு சிறு பாலகனை ஒரு கம்பால் தூக்கியபடி மேலே சுழற்றுவான்.
அவன் அந்தக் கம்பை அந்தப் பாலகனின் நாபியில் வைத்திருப்பான். அந்தப் புவி ஈர்ப்பு சக்தி சரியாக அமைவதால் அந்தப் பாலகன்
கீழே விழுவதில்லை.
இதேபோல் நம் வீடு என்பது உடலானால் பிரம்ம ஸ்தானம் என்பது நம் இதயம். இது வீட்டின் நடுப் பாகமாக இருக்கும். வீட்டின் புவி ஈர்ப்பு இடம் இதுதான். எப்படி நம் இதயத்தைப் பளு இல்லாமல் பாதுகாத்துக் கொள்கிறோமோ, அப்படி இந்த நடு இடமும் பளுவில்லமால் காலியாக விட வேண்டும். ஆனால் பலர் வீட்டில் அங்குதான் கனம் கனமாகச் சோபாக்களும் நடுவில் பெரிய மேஜையும் அதன் அருகில் பக்கவாட்டு மேஜைகளும் போட்டு நிரப்பி விடப்பட்டிருக்கும். இதனால் வீட்டுச் சொந்தக்காரருக்கு மன அழுத்தம் அல்லது டென்சன் இருந்துகொண்டே இருக்கும்.
முன் காலத்தில் கிராமங்களின் வீடுகள் எல்லாமே ஒரே மாதிரியாகத் திண்ணை, பின் உள் நுழைந்தால் பெரிய முற்றம் இருக்கும். இது மேலே திறந்திருக்கும்; சூரிய ஒளிக்கும் நல்ல காற்றோட்டத்திற்கும் வழி வகுக்கும். இன்றும் அதே போல் பல வீடுகளைக் கிராமங்களில் காண்கின்றோம். வீட்டின் நடு இடம் காலியாக ஆகாயம் தெரியும்; அந்த இடமே பிரும்மஸ்தானம். அந்த வீடுகளில் கூட்டுக் குடும்பம் ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்தபடி வாழ்ந்தனர். அன்பினால் கட்டுண்டனர்.
வாஸ்து தேவனின் அருளால்தான் நாம் நல்ல வீடு அமைக்கிறோம். வாஸ்து புருஷனுக்கு பிரும்மாவின் அருள் உண்டு. அதனால்தானோ, என்னவோ நடுப்பாகம் பிரும்மஸ்தானம் என்று கொடுக்கப்பட்டிருக்கலாம். பிரும்ம ஸ்தானம் நன்கு அமைய, பிரும்மாவின் அருள் கிடைக்கும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Aug 29, 2009
* Do not use semicolon(;)