
விசாலம்
ஒரு மனையில் நடுவே வீடு கட்ட வேண்டும். மனையின் நடுப் பகுதியாக இது இருக்க வேண்டும். இந்த இடத்திற்கு வாஸ்துவில் பிரும்ம வீதி என்பார்கள். பின் அதைச் சுற்றி இருக்கும் பகுதியில் வெளிச்சமாக ஆகாயம் தெரியும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியை தெய்வப் பகுதி என்பார்கள். அதற்கு அடுத்த பகுதி, மனுஷ வீதி எனப்படும். அதுவரைதான் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டம் இருக்கும். பின் வருவது காம்பவுண்ட் சுவர்தான். மனுஷ வீதியைச் சுற்றி இருப்பது, பிசாசு வீதி எனப்படும். அதனால் தான் வீட்டை நிலத்தின் கடைசி வரை உபயோகித்து, பெரிய வீடாகக் கட்டக் கூடாது. நிச்சயமாக விட்டுக்குச் சற்றுத் தள்ளி மதில் சுவர் கட்டப்பட வேண்டும்.
பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருப்பது அவசியம். நமது சமையல் அறையில் குழாய் ஒழுகி அங்கு நீர் கசிந்துகொண்டே இருந்தால், அந்த அறை எப்படி இருக்கும்? அதே போல் சன்னல்கள் இல்லாமல், காற்று அடைப்பட்டு, அந்த அறை இருட்டாகவும் இருந்தால் எப்படி இருக்கும்? இதனால் தான் பஞ்ச பூத சக்திக்குச் சமநிலை கொடுத்து, திக்பாலர்களுக்கும் அவரவர் இருக்கும் இடத்தைக் கொடுத்து வீடு கட்டவேண்டும்.
வீட்டிற்கு காற்று மிக முக்கியம். ஆகையல் தான் வீட்டைச் சுற்றி இடம் விடவேண்டும். இந்தக் காலத்தில் அடுத்தடுத்து வீடுகள் ஒவ்வொரு மதில் சுவரையும் தொட்டபடி இருக்கின்றன. எல்லாம் இடமில்லா கஷ்டம் தான். பஞ்ச பூத தத்துவத்தை மறந்து, பணமே முக்கியமாகக் கருதி, சின்ன இடுக்கிலும் அறையைக் கட்டி வாடகைக்கு விடுகின்றனர். ஆனால் அதில் வசிப்பவரின் பாடு மிகவும் பரிதாபம்தான். ஒவ்வொரு வீட்டிலும் வியாதி பெருக இதுவும் ஒரு காரணம்தான்.
எப்படி வீட்டிற்குக் காற்று வேண்டுமோ அதே போல் சூரிய வெளிச்சமும் வேண்டும். பஞ்ச பூதத்தில் இது அக்னியாக வருகிறது. வீட்டைச் சுற்றி இடம் வைக்க, பசுமையான தோட்டமும் வடகிழக்கில் கிணறும் குழாயும் நீர்த்தொட்டியும் வைக்க முடியும். இதுவே பஞ்ச பூதத்தில் நீர் ஆகிறது. வீட்டைச் சுற்றி வெளிச்சம் கிடைத்து, அது திறந்திருப்பதால் அங்கு நல்ல சக்தி உண்டாகி, எளிதாக வீட்டினுள் செல்ல முடிகிறது. இதுவே ஆகாயம். வீட்டைச் சுற்றி இருக்கும் மண்ணே பூமி. இதில் செடிகள் வளர்ந்து நாம் வெளியே தள்ளும் கரிமலவாயுவை எடுத்துக்கொண்டு நமக்குப் பதிலுக்கு பிராண வாயு கொடுக்கின்றன. ஆக மொத்தம் நாம் பஞ்ச பூதங்களின் சக்தியினூடே வாழ்கிறோம் நம் உடலிலும் இந்தப் பஞ்ச பூத சக்திகள் ஆட்கொண்டிருக்கின்றன.
மனை என்று சொல்லும் போது கிழக்கு நோக்கிய மனை, தெற்கு நோக்கிய மனை, மேற்கு நோக்கிய மனை, வடக்கு நோக்கிய மனை என்று நான்கு திசைகளிலும் மனைகள் இருக்கும். இதில் முக்கியமாக, நல்ல அம்சமாக விளங்குவது கிழக்கு நோக்கிய மனை. அடுத்து வருகிறது வடக்கு நோக்கிய மனை. இதற்கு அடுத்தபடிதான் மேற்கும் தெற்கும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Sep 22, 2009
* Do not use semicolon(;)