
விசாலம்
பூமி பூஜை சரியாக அமைய வேண்டும். அஷ்ட திக்குகளுக்கும் பூஜை செய்து அந்த நிலத்தை எடுத்துக்கொள்ள உத்தரவு வாங்கிக்கொள்ள வேண்டும். பூமியின் எட்டு பக்கங்களிலும் அதற்கு உகந்த கணங்கள் அல்லது தேவதைகள் காத்து வருகின்றனர். பூமிதேவிக்கு பூஜை போடுவதுடன் இந்த அஷ்ட திக்கு பாலகர்களுக்கும் பூஜை செய்வது அவசியம். நேரம் இன்மையாலும் சரியான புரோகிதர்கள் கிடைக்காததனாலும் இந்தப் பூஜையை மிகவும் சுருக்கமாக இப்போது ஒரு கண்பதி பூஜையுடன் முடித்து விடுகின்றனர்.
பூமியிடமிருந்து நிலம் நாம் வாங்க முதலில் அதைப் பார்வை இட் வேண்டும். பல காலங்கள் பூமி தன்னிடத்தே கொண்டிருந்ததை நாம் அப்படியே எடுத்துக்கொள்வது சரியாகாது. ஆகையால் நாம் பூமாதேவியிடம் அனுமதி பெற்று, பின் தான் வீடு கட்டத் துவங்க வேண்டும். அதற்குத்தான் பூமி பூஜை.
முதலில் விக்னமில்லாமல் வீடு முடித்துத் தர விக்ன விநாயகரின் பூஜை தொடங்க வேண்டும். அதற்கு நாள் பார்க்க வேண்டும். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் வாஸ்து படி நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தாலும் வீட்டின் தலைவியின் ஜாதகத்திலும் நல்ல நேரமாக இருக்க வேண்டும்; அதாவது ஏழரைச் சனியோ, அஷ்டமத்துச் சனியோ அல்லது சந்திராஷ்டமோ இருக்கக் கூடாது. அவரது ஜாதகத்தில் நாலாவது இடமான சுகஸ்தானம், வீடு அமையும் ஸ்தானத்தில் நல்ல கிரஹஙகள் இருக்க வேண்டும். அப்படி சாதகமில்லாமல் இருக்கும் வேளையில் வீடு கட்டத் துவங்கினால் ஏதாவது தடங்கலோ அல்லது பாதி கட்டி மேலே தொடரமுடியமல் நிற்கும் நிலைமையோ வர வாய்ப்பு உண்டு.
பூமி பூஜை சரியாக அமைந்து விட்டால் எல்லாமே நன்மையாக முடியும். அதில் பழுது ஏற்பட்டால் கட்டி முடிப்பதற்குள் பல தடங்கல்கள் ஏற்படலாம். சிமின்ட்டின் விலை அதிகமாகி, வாங்கப் பணம் போதாமல் போகலாம்; அல்லது தொழிலாளர்கள் பிரச்சனையில் கட்டுவது தாமதமாக ஆகலாம்; இயற்கைச் சீற்றத்தினால் கேடு வரலாம். எனவே சரியாகச் செய்வது நல்லது.
பூமி பூஜை செய்யவும் விதிமுறைகள் இருக்கின்றன. அஷ்ட திக்கிலும் பூஜை செய்து, பின் பூஜை செய்பவர்கள் அந்த எட்டு திக்கிலும் அதற்கு ஏற்ற அதிபதிகளுக்கு எலுமிச்சை, பூசணிக்குள் குங்குமம் வைத்துப் படைப்பார்கள். வடக்கில் குபேரன், மேற்கில் வருணன், தெற்கில் யமன், கிழக்கில் இந்திரன், ஈசான்யம் எனபடும் வடகிழக்கில் ஈசன், வடமேற்கில் வாயு, நைருதி, தென் மேற்கில் இராட்ஷசன், அக்னி மூலை என்ற தென் கிழக்கில் அக்னி ஆகியோர் உள்ளார்கள். இவர்களுக்கு எல்லாம் பிரீதி செய்து பின் தான் வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். பூமி பூஜையின் போது பூமிக்குள் சிறிது தங்கம், வெள்ளி, முத்து, பாதரசம், சில பூக்கள் என்று வட கிழக்குப் பகுதியில் ஒரு பள்ளம் வெட்டி அதில் தகுந்த மந்திரங்கள் ஓதி பூமித் தாய்க்குக் கொடுத்தல் அவசியம். பூஜை செய்ய வரும் புரோகிதருக்கு இவை தெரிந்திருக்க வேண்டும்.
வீடு கட்டத் தண்ணீர் தேவை. அந்தக் கிணறு, தென் மேற்கில் இருக்கக் கூடாது. கட்டடம் ஈசான மூலையில் தாழ்வாகவும், தென் மேற்கில் உயர்ந்தும் இருக்க வேண்டும் நமது கிரஹங்கள் சிறப்பாக இருந்தால் பிரமாதமான வாழ்க்கையை அந்த வீடு அமைத்துக் கொடுக்கும். வீடு அரண்மனை மாதிரி இருந்தும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றால் அத்தனை பெரிய வீட்டால் ஒருவருக்கும் சுகமில்லை இல்லையா?
முக்கியமாகப் பார்க்க வேண்டியது, அந்த நிலத்தில் முன்பு சுடுகாடு அல்லது புதைக்கும் இடம் இருந்ததா? பாமபுகள் வாழும் இடமாக இருந்து பின் அதை அழித்துக் கட்டுக்கிறார்களா? உள்ளே எலும்பு அல்லது மண்டை ஓடு போல் ஏதாவது கிடைத்ததா? இதை எல்லாம் விசாரித்துப் பார்த்து வாங்கினால் பின்னால் பிரச்சனை இல்லாமல் இருக்கும். இந்தக் காலத்தில் ரெடியாக அடுக்கு மாடிக் கட்டடம் கிடைக்க, அதில் வாங்கினால் எப்படி இதை எல்லாம் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.
நம் ஜாதகம் சரியாக அமைந்தால் இதுவும் சரியாக அமைந்து விடும்; தவிர வாஸ்து மந்திரம் ஒன்று இருக்கிறது. அதைப் படித்தால் வாஸ்து பிரச்சினை நீங்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. என்ன இருந்தாலும் மனைவியின் ஜாதகத்திற்கு ஏற்றபடி தான் வீடு அமையும்.
(தொடரும்.............
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jun 09, 2009
* Do not use semicolon(;)