
விசாலம்
போன வாரத்தின் தொடர்ச்சி தான் இது. மனை வாங்கும் போது அந்த இடத்தின் மண் களிமண்ணாக இருத்தல் கூடாது. ஏனென்றால் வீடு கட்டிய பின் பல வெடிப்புகள் வர வாய்ப்பு உண்டு.
மனையின் அருகில் பல மரங்கள் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் சில மரங்களின் வேர்கள் ஆழமாகப் பரவி, வீட்டையே ஆட்டும் நிலைமையை உண்டு பண்ணும். அதுவும் ஆல மரம், அரச மரம், புளிய மரம் போன்றவை இருந்தால் கேட்கவே வேண்டாம். சில பழைய கட்டடங்களில் வீட்டின் சுவரின் நடுவிலிருந்து அரச மரத்தின் கன்று கிளம்பி இலைகள் விட்டுக்கொள்ளும். பின் மழையில் அது வளர்ந்து சுவரின் இடுக்கிலேயே வளர்வதைப் பார்க்கிறோம்.
மனையின் பூமி, மணல் போல் இருக்க, வீடு கட்டிய பின் கீழே உட்கார்ந்துவிடும். மண்ணைத் தோண்டிச் சுத்தப்படுத்தும் போது அங்கே எலும்புக்கூடு, கரித் துண்டுகள், முடியின் முடிச்சுகள் போன்றவை இருத்தல் நல்லதல்ல. பாம்புப் புற்று, கறையான் போன்ற மண்ணைத் தவிர்க்க வேண்டும்.
மண் நல்ல மண்ணா என்று சோதிக்க ஒரு குழி வெட்ட வேண்டும். அதிலிருந்து கிடைத்த மண்ணைத் திரும்பவும் அதில் போட, மீதி மண் மிச்சம் இருந்தால் அது தரமான மண் எனக் கொள்ளலாம்.
நிலம் சம நிலையாக இருக்க வேண்டும் அல்லது வடக்கு சற்று சரிந்தும் தெற்கு உயர்ந்தும் இருக்க வேண்டும். சரிவு மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமும் இருக்கலாம். தென்கிழக்கும் வடமேற்கும் சமமாக இருத்தல் அவசியம். இதை மறக்காமல் இருக்க, நம் உடம்பையே உதாரணமாகக் கொள்ளலாம்.
நமக்குத் தலை மிகவும் முக்கியம். எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்பார்கள். நம் தலைதான் உயர்ந்து நிற்கிறது. அதே போல் தென்மேற்கு மூலை அதாவது கன்னி மூலை உயரமாக இருக்க வேண்டும். அடுத்தது வருபவை, நம் தோள்கள். நம் இரு பக்கத் தோள்களும் சமமாக இருக்கின்றன.
அதேபோல் தென்கிழக்கு, வடமேற்குப் பகுதி சமமாக இருக்க வேண்டும்; அதாவது அக்னி மூலை, வாயு மூலை சமமாக இருக்க வேண்டும். நம் கால்கள் கீழே இறங்கித்தான் இருக்கின்றன. அதேபோல் வடகிழக்குப் பகுதி தாழ்வாகக் கீழே சரிந்து இருக்க வேண்டும். இதுவே ஈசான மூலை என்பது. இதுவே வாஸ்து புருஷனின் தலைப் பகுதி என்பதால் மிகச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பூஜை அறை வரவேண்டும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Aug 21, 2009
* Do not use semicolon(;)