
விசாலம்
சாதாரணமாகவே ஒரு திருமணம் நடத்தும் போது அதை நடத்தத் தகுந்த மண்டபம் தேர்ந்தெடுக்கிறோம். அப்போது பந்தற்கால் நடுவது என்ற ஒரு சடங்கை நடத்துகிறோம். இது நல்ல நேரம் பார்த்து, நல்ல முகூர்த்தம் பார்த்து, பின் வாழைமரம் குலையோடு இரு பக்கங்களும் கட்டி, பின் மாவிலைத் தோரணமும் கட்டி, பின் விளக்குடன் சிறு பூஜை செய்வது வழக்கம். இந்தக் காலத்தில் இயந்திர உலகத்தில் ஓட்டமே அதிகமாக இருப்பதால் தற்போது விமரிசையான பூஜை இல்லாவிட்டாலும் வாழை மரங்கள் கட்டிவிடுகின்றனர்.
பூமி பூஜை எத்தனை முக்கியமோ, அத்தனை முக்கியம் தலைவாசலுக்குப் பூஜை. இதற்கும் நல்ல நேரம், முகூர்த்தம் பார்த்து ஆரம்பிக்க வேண்டும். வாசற்கதவு என்றாலே நல்ல பாதுகாப்பு தான் நம் மனத்தில் உதிக்கிறது. அதற்கு நல்ல உறுதியான, அழுத்தமான, மழைக்காலத்திலும் ஈரக்கசிவு வராமல் இருக்கும் மரப்பலகையாக, கறையான் வராமல் இருக்கும் மரமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சிறந்த மரம், தேக்குத்தான். கதவு செய்யும் போது நம் இஷ்டப்படி முகப்பில் கஜலட்சுமியோ, கணபதியோ உருவமாகச் செதுக்கலாம்.
இந்தப் பூஜை செய்யும் போது வீட்டைக் கட்டும் மேஸ்திரியும் வீட்டின் படம் வரைந்து கொடுத்த இஞ்சினியரும் அந்த வீட்டின் தலைவனும் தலைவியும் இருக்க வேண்டும். நல்ல அழுத்தமான வர்ணங்களில் (கறுப்பைத் தவிர்த்து) ஒன்பது சட்டைத் துணியளவு அந்த நிலையில் சுற்றினால் போல் கட்டப்பட்டு, பின் அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, கணபதி பூஜையுடன் ஆரம்பித்து, நிலைக் கதவுக்கும் பூஜை செய்வார்கள். வாஸ்து மந்திரமும் சொல்வார்கள். பின் திருஷ்டிக்காக எலுமிச்சம்பழம் வெட்டி, நடுவில் குங்குமம் வைத்து, வீசி எறிந்து விடுவார்கள்.
நாம் உபயோகிக்கும் பஞ்சாங்கங்களிலும் வீட்டிற்குக் கால்நாட்டும் முறைகள் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டின் பிரதான கதவு மூன்றடிக்கு அதிகமாக இருத்தல் நல்லது. கதவின் அகலம் அதே மூன்றடியாக இருத்தல் கூடாது. கதவின் அகலம் 37 அங்குலம் அல்லது 39, 41, 42 அல்லது 45 அங்குலம் இருக்கலாம்.
பெரிய பங்களா போல் இருந்தால், கதவு 50 அங்குலம் வரை இருக்கலாம். கதவின் நீள் அகலம் 5 : 9 ஆக இருக்க வேண்டும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Oct 19, 2009
* Do not use semicolon(;)