கணித மேதை ராமானுஜன், பிற கலை மேதைகள்

 கணித மேதை ராமானுஜன், பிற கலை மேதைகள்

உலகம் நீர் சார்ந்தது, நிலம் சார்ந்தது. தாவரங்களுக்கான, பல கோடி உயிரினங்களுக்கான இவ்வுலகம் மனிதனுக்கான (Anthro centric) உலகமும் ஆகும். ஆனால், இம்மனிதனின் மனத்திற்குள்ளோ ஆயிரம் ஆயிரம் உலகங்கள். கணிதம், பௌதீகம், ரசாயனம் பொன்ற அறிவியல் மட்டுமன்றி, இசை, சிற்பம், ஓவியம், இலக்கியம் என்றெல்லாம் எண்ணிறந்த உலகங்கள்!

கணித மேதை ராமானுஜனின் உலகமோ, எண்கள் சார்ந்தது. பூஜ்யத்தில் தொடங்கி 1, 2, 3 என இறுதியற்ற கடைசி எண்கள் (Infinity) வரை தேடல் கொண்ட கணித உலகம் அது. எண்களின் தோழன் கணித மேதை ராமானுஜன். வரலாற்று ஆசிரியர் ராபர்ட் கனிகல் (Robert Kanigel) என்பவர் கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றை 'அறிய இயலாத இறுதி எண்ணை அறிந்த மனிதன் (The man who knew infinity)' என்று நூலாக எழுதினார். இசைக்கு ஒரு மொசார்ட் (Mozart) போல, பௌதீகத்திற்கு ஒரு ஐன்ஸ்டைன் (Einstein) போல, கணிதத்திற்கு ஒரு ராமானுஜன் என்கிறது இந்நூல்.

1887இல் பிறந்த ராமானுஜன் 32 ஆண்டுகளே வாழ்ந்தார். ஆனால் இவர் கணித உலகிற்கு அளித்த சாதனைகளோ மதிப்பற்றவை. சாதாரண திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய இவரது பள்ளி வாழ்க்கை, கும்பகோணம் காங்கேயன் ஆரம்பப் பள்ளி, நகர உயர்நிலைப்பள்ளி, கல்லூரியில் F.A. (First Arts) என்று தொடர்ந்தது. முழுமையாக ஒரு பட்டப் படிப்பைக் கூட பெறாத ராமானுஜனின் மனத்துள்ளோ விதவிதமான எண்களின் தேற்றங்கள் (Theorms) ஊற்றெடுத்தன. சிறு சிறு துண்டுக் காகித அட்டைகளிலும் சிலேட்டுகளிலும் நோட்டுப் புத்தகங்களிலும் இவர் எழுதி வைத்த நூற்றுக்கணக்கான தேற்றங்களைக் கண்டு, கேம்ப்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியில் ஜி.எச்.ஹார்டி (G.H. Hardy) என்ற கணித மேதை வியந்தார். இவரது தேற்றம் (Sum) ஒன்றினை நிரூபிக்க ஆங்கிலக் கணித மேதைகள் மூவர் பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வெள்ளையருக்கு மட்டுமே ஃபெல்லோசிப் (Fellowship) என்ற விருதினை அளித்து வந்த டிரினிடி கல்லூரி, கறுப்பராகக் கருதப்பட்ட ராமானுஜனுக்கு, தற்போதைய நோபல் பரிசுக்கு இணையான ஃபெல்லோசிப் விருது வழங்கிக் கௌரவித்தது. ராமானுஜன் கண்டு பிடித்த எண் தேற்றங்கள் இன்றைய கணினி, தொலைத் தகவல் தொடர்பு போன்ற பல துறைகளில் அளவற்ற பயன்களை அளித்து வருகிறது.

குடந்தை சாரங்கபாணி சன்னதித் தெருவிலுள்ள திண்ணை, முற்றம், கீற்றுக் கூரையாலான ஒரு சாதாரண ஒட்டு வீட்டில்தான் ராமானுஜன் வசித்தார். தேற்றங்களை, சிறு சிறு துண்டுக் காகித அட்டைகளில் எழுதி வீட்டின் கூரையில் சொருகி வைப்பது அவரது வழக்கம். அக்காலத்தில் வீடுகள் தோறும் ஆடுபுலி ஆட்டம் எனும் விளையாட்டினை ஆடுவது வழக்கம். தன் தாயார் கோமளத்தம்மாளுடன் இவர் ஆடிய இவ் விளையாட்டுதான் கணிதம் சார்ந்த மன உலகிற்கு இவரை இட்டுச் சென்று, பெரும் புகழை ஈட்டித் தந்தது.

எண்களுடன் தோழமை கொண்டவர் ராமானுஜன் மட்டுமல்ல. கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இசைக் கலைஞர்கள் போன்ற எண்ணிறந்தோர் எண்களால் ஆன புதிய படைப்புகளைப் படைத்தனர். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார், சைவ சமயக் குரவர்களில் ஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என ஏழு எண்கள் வரையிலான தேர் போன்ற வடிவில் படைத்த ரதபந்தக் கவிதைகள் கணிதச் செய்யுள் வடிவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

திருமழிசைபிரானின் எண்கள் சார்ந்த பாசுரமும் குறிப்பிடத்தக்கவையாகும். இது மட்டுமல்லாமல் எண்கள் சார்ந்த ரதபந்தம், முரசபந்தம், நான்கும் நான்கும் எட்டு பாம்புகள் பிணைந்த அஷ்டநாக பந்தம், பதும பந்தம், மயூர பந்தம், மாலை மாற்று போன்றவைகளும் எண்கள் சார்ந்த தமிழ்க் கவிதை வடிவங்களில் முக்கியமானவையாகும். இதனைத் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் தேடிப் பிடித்து, நமக்குத் தொகுத்து அளித்துள்ளார்.

இசை உலகிலோ எண்களை லயம் என்கின்றனர். தாளம் எனும் கால எண்களால் ஆனது லயமாகும். கோவில் சுவாமி புறப்பாட்டின்போது நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும் மல்லாரிக்கு, பாடல் என்று ஒன்றும் கிடையாது. மறைந்த இசை மேதை திருமெஞ்ஞானம் நடராஜசுந்தரத்தின், திரிபுடைதாளக் கணக்கில் வாசிக்கப்பட்ட மல்லாரிக்கு மயங்காதார் அன்று யாரும் இலர்.

மறைந்த தவில் மேதை நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், நடையிட்டுக் கொண்டே வாசிக்கும் நடைச்சொல் ஆகியன சங்கீத உலகின் லய எண்களாகும். நயாகரா நீர்வீழ்ச்சி போல் மணிக்கணக்கில், நாள் கணக்கில் தொடரும் திருவாவடுதுறை ராஜரெத்தினத்தின் நாதஸ்வர இசை மழை, லயம் என்ற தாள எண் சார்ந்த ஆதார சுதியைக் கொண்டதாகும். குடந்தை அருகில் உள்ள சுவாமி மலை புகழ்பெற்ற சிற்பிகள் வாழ்ந்த ஊராகும். இவர்களது கைகளில் உருவாக்கப்பட்ட ஐந்து தாள பார்வதி அம்மன் சிலைகள், பத்து தாளத்தில் செய்யப்படும் சிவன், விஷ்ணு, ரிஷபதேவர் சிலைகள் அனைத்தும் தாளம் எனும் எண்கள் வடிவத்திலேயே அமைக்கப்படுவதாகும். எகுதி மெனுகின் வயலின் இசைக்கும், நேர்க்கோட்டையும் கிடைக்கோட்டையும் எண்களால் வர்ணித்த அந்தோயின்கோ என்ற கவிஞனுக்கும், எஸ்சர் (Escher) என்ற ஜியோமிதி ஓவியனுக்கும் யுகோஸ்லோவேக்கிய கணிதக் கலைஞர் வாஸ்கோகோப்பாவுக்கும் அமெரிக்க கியூபிஸ கவிஞர் கம்மின்ஸ் (e e cummings) என்பவருக்கும் கணிதம் சார்ந்த எண்களே படைப்புகளாகத் திகழ்ந்தன.

மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்கிற ராமானுஜம் சிலை, அமெரிக்கச் சிற்பியால் உருவாக்கப்பட்டது. ராமானுஜம், லண்டன் மேதை ஹார்டிக்கு எழுதிய முதல் தேற்றமும், அதே படத்தில் உள்ளது.

=============================================================
கட்டுரை ஆசிரியரின் வலைப் பதிவு: http://www.dhenuka.blogspot.com

Jun 01, 2009

Comments

Security Code

 
* Do not use semicolon(;)

POLL OF THE DAY

Semi-Final Meet
India will Face in Semi-final

           
ho

QUICK LINKS

CLICK HERE

 Find Property in Chennai at India's Largest Apartment Portal - CommonFloor.com

Introducing E-learning Products

Panchangam
30-Nov-2015
7th Day Of Month Of Kaarthigai
  • Nalla Neram :6:15-7:15 | 4:45-5:45
  • Rahukalam: 7:30am-9:00am
  • Yamakandam: 10:30am-12:00pm
  • Kuligai: 1:30pm-3:00pm

POLL OF THE DAY

Semi-Final Meet
India will Face in Semi-final

           

© Copyright 2015,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us,
Copyright and Disclaimer, Privacy Policy.