(நிஜங்களும் நினைவுகளும் - 1)
தாமரையில் வெள்ளைத் தாமரை சிறந்ததா?அல்லது ரோஸ் தாமரை சிறந்ததா? என்று கேள்வி கேட்டால் என் ஓட்டு சிவப்புக்குத் தான்!தேர்தல் சமயமாக இருப்பதால் சட்டென்று ஓட்டு உதாரணம் தான் வருகிறது!
சிவப்பு அன்பின் நிறம்; சிவப்பு பக்தியின் நிறம்; சிவப்பு காதலின் நிறம். கோபத்தின் நிறம் கூடச் சிவப்புத்தான்! செக்கர் சிவந்த வானம் என்கிறோம். செந்துரப்பூவே என்ற பாடல் பிரசித்தமானது. செந்தாமரை என்கிற பெயர் உள்ளது. ஆனால் வெண்தாமரை என்று பெயர் இருக்கிறதா தெரியவில்லை!
சரஸ்வதி தேவியைப் போற்றிப் பாடும் போது பாரதி அவள் வெண்பட்டுடுத்தி காட்சியளிப்பதால் அதற்கு இணையாக வெள்ளைத் தாமரை என்று கூறி இருப்பானோ? வெண்மை, பரிசுத்தத்தின் நிறம். வெண்புரவி உண்டு. அது வீரத்திற்கும் காதலுக்கும் இலக்கணம்.
ஆனால் வெண்மை நிறமென்பது விதவைகளுக்கு என்று ஒரு எழுதப்படாத சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள்! எந்த சினிமாவானாலும் சீரியலானாலும் கணவன் இறந்து போனான் என்றால் அடுத்த காட்சியில் மனைவி வெள்ளைப் புடவையில் தான் காட்சி அளிப்பாள்!
எங்கள் ஊரில் (திண்டுக்கல் தான்) ஒரு அம்மாள் எங்கள் வீட்டிற்கு வருவாள். அவ்வப்போது வந்து ஏதாவது உதவி செய்துவிட்டு, கூலி வாங்கிக்கொண்டு போவாள். வடகம் இடுவது, அப்பளாம் இடுவது போன்ற சமையல் வேலைகள் செய்து, நாள் கிழமை என்றால் பெரிதாக மாக்கோலமிட்டு, கல்யாணக் கோலமிட்டு ஆரத்திப் பாட்டுப் பாடி, தன் குடும்ப வருவாயைப் பெருக்கி வந்தாள். அவள் கணவன் ஒரு சோம்பேறி! சீட்டு ஆடுவதும் வம்பு பேசுவதும் என்றாவது ஒரு நாள் (மாதத்தில்) சமையல் வேலைக்குப் போவதும் மறுநாள் உடல் வலி என்று குடிப்பதும் அவன் வாடிக்கை!
இப்படிப்பட்ட அவன் ஒரு நாள் இறந்து போனான்! இரண்டு பெண் குழந்தைகள்! சாப்பாட்டிற்கு என்ன செய்வது? கணவன் இருந்தபோது அந்த மாமியைs சுமங்கிலி என்று அனைவரும் அழைத்து, வெற்றிலைப் பாக்கு வைத்துத் தருவார்கள்
நவராத்திரி என்றால் ரவிக்கைத் துணி, சுஹாசினி பூஜை என்று மாமிக்கு வரும்படி இருக்கும்! கணவனால் கிடைத்த ஒரே நன்மை இது தான்! இப்போது அதுவும் போயிற்று! மாமி அழுதாள். தன் கணவன் இறப்பைவிட எதிர்காலப் பயமும் வருமானமின்மையும் மாமியை அச்சுறுத்தின. வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தாள். வெள்ளைப் புடவை வாங்கக் காசில்லாத காரணத்தால் யாராவது தந்த மங்கலான புடவைகளைக் கட்டிக்கொள்ள ஆரம்பித்தாள்.
அவளுக்குப் பரிசாகக் கிடைத்த புதுப் புடவைகளைக் கிழித்துத் தன் பெரிய மகளுக்குத் தாவணியும் சிறியவளுக்குப் பாவாடையும் தைத்துப் போட்டாள்! ஏழ்மையும் இயலாமையும் கைகோர்த்து வலம் வர, திடீரென்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது!
எங்கள் ஊருன்னு ஒரு பிரபல நாடகக் கம்பெனி வந்தது. அப்போதெல்லாம் பிரசாரத்திற்கு மாட்டு வண்டியில் பேண்ட் வாத்தியம் முழங்க நாடக நோட்டீஸுகளை விநியோகிப்பார்கள். அதுவும் நாங்கள் இருந்தது பாலகிருஷ்ணாபுரம். இப்போது செல்வி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக மேம்பாலம் கட்டித் தருவதாகச் சொன்னாரே... அதே சரித்திர பிரசித்தி பெற்ற இடம் தான்!
ஊருக்குச் சற்று தள்ளி இருந்த காரணத்தால் டவுனில் நடக்கும் விஷயங்களை விளம்பரப்படுத்தினால் தான் உண்டு.... நோட்டீஸ் விநியோகித்தபடி வரும் மாட்டு வண்டி பின்னே அப்பகுதிக் குழந்தைகள் கூட ஓடி வருவார்கள்...
அப்போது தான் நோட்டீஸ் வாங்க வந்த அந்தப் பெரியவள் (நம் வசதிக்காக சாந்தி என்று பெயர் வைப்போம்!) சாந்தி, அந்த நாடகக் கம்பெனி முதலாளியின் கண்களில் பட்டிருக்கிறாள்! சாந்தி அழகாக இருப்பாள். கம்பெனி முதலாளி சாந்தியைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வந்தார். தன் நாடகக் கம்பெனியில் அவளுக்கு ஒரு நல்ல வேடம் தருவதாகவும்... தினம் தினம் மாலை மட்டும் நடிக்க வந்தால் போதும் என்றும் பள்ளிப் படிப்பை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார் (இந்தச் செய்திகள் எல்லாம் என் தாயால் எனக்குப் பின்னால் கூறப் பட்டவை. நான் அப்போது மிகச் சிறியவள்.. நாடகம் பார்க்கப் போனதெல்லாம் கூட சரியாக நினைவில் இல்லை).
ஏழ்மைத் தாய்க்கு வேறு வழி தெரியவில்லை. சம்மதித்துவிட்டாள். இப்போது மாதிரியில்லை அந்தக் காலம்.... சமுதாயக் கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம் போன்றவை இருந்த காலம்...
நீதியைக் கற்பிக்க, திருடாதே பொய் சொல்லாதே என்பார்கள் அப்போது... இப்போதோ...? கற்றது களவு என்கிறார்கள்.. நாங்கள் பொய் சொல்லப் போகிறோம் என்கிறார்கள்! சமுதாய மாற்றம் என்பது எப்படி எப்படியெல்லாமோ இருக்கிறது... மூடப் பழக்க வழக்கங்கள் ஒழிக்கப் பட வேண்டும் தான். ஆனால் அத்துடன் நல்லவையும் காணாமல் போய்விடுகிறதே!
சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில் பாத்ரூம் போவதற்காக எடுத்து வைக்கப்பட்ட சொம்பு ஜலத்தில் கதாநாயகி மிளகாய்த் துளைப் போடுவாளாம்.. அவர் அலறுவது கண்டு ரசிப்பாளாம்! கதாநாயகி அழகாக இருந்தால் அவள் செய்வதெல்லாம் நீதி ஆகிவிடுமா?
விட்டுத் தள்ளுங்கள்! சாந்தியின் கதைக்கு வருவோம்.... சாந்தி நாடகங்களில் நடிக்கச் சம்மதம் தெரிவிக்கப்பட்டவுடன் வீடு தேடி நாடகப் பாடம் மட்டும் வரவில்லை... பணம் வந்தது.. புது வாழ்வு வந்தது.... அந்த அம்மாள் ஊர் வாய்க்குப் பயந்து எங்கோ தள்ளிக் குடித்தனம் போய்விட்டாள். அன்று அவள் மகள் சாந்தி நடிக்கும் நாடகம் அரங்கேறப் போகிறது...
அந்த அம்மாள் என் தாயைத் தேடி வந்தாள். தன் மகள் நடிக்கும் நாடகம் பார்க்க ஆசையாக இருப்பதாகவும் தனியாகப் போகப் பயமாக இருப்பதாகவும் கூறினாள்.
என் தாய்க்கும் சாந்தியை மேடைமீது பார்க்க ஆசை.. அந்த அம்மாவையும் அழைத்துக்கொண்டு நாங்கள் எங்கள் காரில் கிளம்பினோம்.... டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.... அது ஒரு புராண நாடகம்.... பாஞ்சாலி சபதம்..... சாந்தி பாஞ்சாலியா? பார்த்துக் கொண்டிருந்தோம்... ஓரிரு காட்சிகள் முடிய மேடையில் திரை விலக.... அதோ சாந்தி....!
வெள்ளை உடையில் குந்தி தேவியாக..... முதன் முதலில் வெண்பட்டு உடுத்தி மேடையில் அரங்கேற்றம்! வெண்ணிற ஆடை நிர்மலா பிரபலமடைந்தது பிறகு.. இது...?
அந்த அம்மாள் நாடகம் பார்க்கப் பார்க்க விம்மினாள்.... தன் மகள் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாள் என்பது கூடத் தெரியாமல் நாடகம் பார்க்க வந்த தாய் அவள்....
கடைசியில் குந்தியின் கதை தான் சாந்தியின் கதையும்.. துர்வாசரின் மந்தர உச்சாரணம் இல்லாமலே சாந்தி கருவுற்றாள்.... திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்.... கருணையான நாடக முதலாளியின் பரிசு! குந்தி மாதிரி இந்தச் சாந்திக்கு ஆற்றில் தன் குழந்தையை விட வேண்டிய அவசியம் நேரிடவில்லை!
அது தான் பெற்றவள் இருக்கிறாளே... ஓடுகிற நதி அத்தனை அழுக்குகளையும் சுமந்துகொண்டு செல்வதைப் போல் இந்தத் தாயும் தன் மகளின் அழுக்கைச் சுமந்தாள்!
இன்று அவர்கள் எங்கோ? தெரியாது.... இந்தச் சம்பவத்தை நான் பல முறைகள் தனிமையில் எண்ணிப் பார்த்ததுண்டு.... வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் தேவதை கைவிட்டாலும் செந்தாமரையில் வாழும் தெய்வம் லட்சுமி இவர்களுக்குத் துணை வந்தாள்!
வசதிக்காக இவர்கள் பாதை மாறிப் போகவில்லை... வேறு வழியின்றி வாழ்வுக்காக இவர்கள் வாழ்க்கை நெறிகளைக் கடந்துவிட்டார்கள்....
இப்போதோ...?
வாழ்க்கை நெறிகளைத் துறப்பது தான் வாழ்வின் இலட்சியம்! அவர்கள் தான் வாழத் தெரிந்த சாமர்த்தியசாலிகள் என்கிற நிலை உருவாகி விட்டது!
நகத்தை வெட்டுவதற்குப் பதிலாக நாம் சிறகுகளை வெட்டிக் கொண்டிருக்கிறோம். சிறகுகளால் நாம் நமது எல்லைக்குள் சுதந்திரமாகப் பறப்பது என்பதை மறந்துவிட்டு ஒன்று தறிகெட்டு அலைகிறோம்.... அல்லது பறப்பதையே மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறோம். படுத்துக் கிடப்பவனுக்கு ஏணி கூட எதிரிதான். எழுந்து நின்றால் இமயம் கூட இடுப்பளவுதான் என்கிறது ஒரு கவிதை...
பாஞ்சாலி சபதமும் குந்தியின் கதையும் நமக்குப் புதிதல்ல... ஆனால் இவை மீண்டும் மீண்டும் புதுப் புது வடிவில் அரங்கேறுவது தான் ஆபத்து!
May 07, 2009
* Do not use semicolon(;)