தில்லிவாசியான எனக்கு 1966இலிருந்து சென்னைக்கு வருடத்தில் இரு முறை வரும் வாய்ப்பு இருந்தது. ஒன்று குலதெய்வம் கோயில் போவது. இரண்டு, டிசம்பர் சங்கீத சீசன். டிசம்பரில் வந்தால் தில்லிக் கடும் குளிரையும் தவிர்க்க முடியுமே. அப்போது இருந்த மதரரஸ் எங்கே? இப்போது பார்க்கும் சென்னை எங்கே? முன்பு இங்கு அழகான தனித் தனி வீடுகள்; பின்னால் தோட்டம்; முன்பக்கம் பூச்செடிகளுடன் அழகான கோலம்... எல்லாம் பார்க்க மிக ரஞ்சிதமாக இருக்கும்.
என் பூர்வீகம் மன்னார்குடி, நாகப்பட்டினம். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இப்போது அங்கு வீடு மட்டும் தான் உள்ளது. ஒரே குடும்பமாக, கலகல என்று இருந்த குடுமபம், இப்போது வெறிச்சென்று இருக்கிறது. எல்லோரும் எங்கே? ஏன் இடம் பெயர்ந்தார்கள்? இந்தக் கேள்விக்குப் பதில் கல்வி. அதிக வருமானம், நாகரீகமாக வாழும் மோகம், தனிப்பட்ட சுதந்திரம், தனிக் குடும்பம்... என் வீட்டையே எடுத்துக்கொண்டால் என் அப்பா பம்பாய்க்குப் போனார். என் மாமாக்கள் சென்னை, பம்பாய், கல்கத்தா என்று போய்விட்டனர். இதே நிலைதான் எல்லாக் குடும்பங்களுக்கும். கேட்க வேண்டுமா? கிராமங்கள் காலியாகி நகரங்களில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது.
முன்பு வந்திருக்கும் போது திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒண்டு குடித்தனம். இரண்டு கஜ நீளமும் ஒரு கஜ அகலமும் உள்ள வீட்டில் பலர் இருந்தனர். அங்கு அந்தரங்கம் இல்லை. எல்லோர் வீட்டிலும் நடப்பது எல்லோர் வீட்டிற்கும் தெரியும். அந்தக் கிராமத்து வீடு எங்கே? இந்தப் புறாக்கூண்டு எங்கே? அந்தக் கிராமத்தில் ஓடிய ஆறு எங்கே? இங்குத் தண்ணீர்க் குழாயை அடிக்கும் பரிதாபம் தான் என்ன? அங்கே இரண்டு மூன்று கூடங்கள், எத்தனைக் கூட்டம் வந்தாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்துச் சமாளிக்கப் பரந்து விரிந்து கிடந்த இடம் எங்கே? ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, உதவும் மனப்பானமை எங்கே? சென்னையில் இதெல்லாம் பார்க்க முடிகிறதா? அழகான ஆறு, தென்றல் வீசும் காற்று, காலை வேளைகளில் குரல் கொடுக்கும் பக்ஷிகள், கோழிகளின் கூவல், கோயில்களின் மணியின் ஒலி... இவற்றை எல்லாம் விட்டுவிட்டு
நகரத்தில் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டுள்ளனர்.
இங்கு என்ன பிரச்சனை...... ஒன்றா இரண்டா? எங்கு பார்த்தாலும் தண்ணீர்ப் பிரச்சனை, சாக்கடைப் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை ஏழைகளுக்கு மண்ணெண்ணெய் கிடைக்காத பிரச்சனை. மேலும் லஞ்சப் பிரச்சனை..... இதனால் டென்சன், ஸ்ட்ரெஸ். அதனால் இரத்த அழுத்தம், நோய் என்று பிரச்சனைகள் தொடர்கின்றன. சில சமயங்களில் சாக்கடைத் தண்ணீரும் குடிதண்ணீரும் காதலிக்க ஆரம்பித்துக் கலநதும் விடுவதால் அதைப் போல் பிரச்சனைகள்... அப்பப்பா சொல்ல முடியாது.
மக்கள் நெருக்கம் தாங்காமல் பல மாடி வீடுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் பல மரங்கள் வெட்டப்பட்டு இயற்கைக்கு முரண்பாடான செயல்கள் ஏற்படுகின்றன. பல வயல்கள் பல சிறு ஆறுகள், குளங்கள் எல்லாம் தூர்க்கப்பட்டு அங்கெல்லாம அடுக்குமாடி வீடுகள் அடைத்துக்கொள்கின்றன. வங்கியில் தாராளமாகக் காருக்கும் பணம் கடன் கொடுப்பதால் தெருவே அடைத்து, கார்கள் ஓட ஆரம்பித்து, வான வெளியை அசுத்தமாக்கிவிடுகின்றன (air polution, sound polution).
முன்பு நான் பேருந்தில் ஏறும் போது அழகாக வழிவிட்டு, பெண்மணிகளுக்கு மரியாதையாக இடமும் அளிக்கும் வாலிபர்களைக் கண்டிருக்கிறேன். தவிர மகளிர் மட்டும் என்ற இடத்தில் ஆண்கள் அமர மாட்டார்கள். அந்த இடம் காலியாகக்கூட இருக்கும். ஆனால் இப்போது வயதான பெண்மணிக்குக்கூட இடம் கிடைப்பதில்லை. முன்பு நான் பார்த்த மதராஸா இது? என நினைக்கும் போது வருத்தம் தான் ஏற்படுகிறது.
சிங்காரச் சென்னை என்கிறார்கள். ஆனால் குப்பைக் கொட்டும் இடத்தில் குப்பை இல்லாமல் 'குப்பை போடாதீர்கள்' என்ற இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
பணக்கார வர்க்கத்தில் இருப்பவர்கள், வெளிநாடுகளைப் போல் கட்டப்படும் அடுக்கு மாடிகளில் நீச்சல் குள வசதியுடன் வாழ்கின்றனர். ஆனால் அங்கு அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று கூடத் தெரிவதில்லை. ஆண் பெண் சமமாக வேலைக்குச் சென்றுவிடுவதால் வீட்டில் இரவில் தான் மனித நடமாட்டம் இருக்கிறது. வெளிநாட்டுக் கலாசாரத்தைக் காப்பி அடிக்கின்றனர். ஆனால் நம் ஹிந்து சம்பிரதாயங்கள், கலாசாரங்கள் ஒவ்வொன்றாக அழிந்து வருகின்றன.
குரோம்பேட்டை, திருவான்மியூர், தாம்பரம் போன்ற இடங்கள் முன்பு மிகுந்த திறந்த புல்வெளிகளுடன் காணப்பட்டன. கிணற்றில் நீர் நிரம்பி வழிந்தது. ஆனால் அங்கேயும் இப்போது இயற்கை அழிக்கப்பட்டு, அடுக்கு மாடிகள் வர ஆரம்பித்துவிட்டன. சின்னச் சின்ன ஏரிகள் கணாமல் போய்விட்டன. அத்துடன் விட்டுக் கொடுக்கும் தன்மை, மனிதநேயம், பொறுமை எல்லாமே காணாமல் போய்விட்டன. தன்னலமே மேலோங்கி நிற்கிறது. லஞ்சமோ, கீழமட்டத்திலிருந்து மேல்வட்டம் வரை புரையோடி நிற்கிறது.
முன்பு இங்கு இருக்கும் பேருந்தைப் பற்றியும் போலீஸைப் பற்றியும் என் ஹிந்தி பேசும் தோழிகளுக்கு மிகச் சிறப்பாகச் சொல்வேன். இப்போது என்ன சொலவது என்றே தெரியவில்லை. எங்கும் ஏமாற்றம்! ஏமாந்துப்போகும் மக்கள்! இந்த நிலைமையைக் கண்டு வருந்தி, சீக்கிரமே பழைய மதராஸ் போல் சென்னை ஆக வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஒன்று மட்டும் மாறவில்லை. அது கோயில்கள், ஆகமங்கள், இசைக் கச்சேரிகள், பண்டிகைகள், திருவிழாக்கள். வருங்காலச் சந்ததியர்கள் இதையாவது மாற்றாமல் பாதுக்காப்பார்கள் என நம்புகிறேன். நான் 30 வருடங்கள் முன்பு பார்த்த சென்னை வருமா என ஏங்குகிறேன்.
May 08, 2009
* Do not use semicolon(;)