பாரதி சொல்லுகிறார்:
"ஏசு கிறிஸ்துவின் வார்த்தை" என்ற தமது கட்டுரையொன்றில் மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி பிரயாகையில் செய்த சொற்பொழிவு ஒன்றின் உட்கருவை ஆராய்ந்து விளக்குகிறார்.
"மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ் கணக்குப் போட்டுப் பார்க்கிறார்கள்..... செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்துவிட்டார்கள். அப்படி நினைத்தபடியால் அவர்களுக்குப் பலவித அசௌகரியங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக்கூடாது."
மேற்குத் தேசத்தில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவிட்டு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், இலங்கை என்று உலகெல்லாம் சுற்றியலைந்து அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நன்கறிந்தபின், என் பாட்டனார் மேலே கூறியது முற்றிலும் உண்மையானது என்பது எனக்குப் புலப்படுகிறது.
அவர் மேற்குத் தேசத்தாருக்குக் கூறியது உண்மையென்றால், இன்று நமக்கும் அதே உண்மை பொருந்துவதாகிவிட்டது. நாம் இன்று செல்வத்தைப் பெரிதாக மதிக்கத் தொடங்கிவிட்டோம். செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைக்கத் தொடங்கிவிட்டோம். பணப் பேராசை நம் அடிமனத்துள் பேய்போல் புகுந்துகொண்டு நம்மைப் பல வகையாக ஆட்டிவைக்கிறது. பணப் பேராசை சமுதாயத்தின் 'பண்பு' (characteristic) என்று சொல்லுமளவிற்குக்கூட சமுதாயத்தில் பரவிவிட்டது!
நானும் என் கணவரும் சிற்சில சமயங்களில் எங்கள் வளர்ச்சியைக் கணக்கிட்டுப் பார்க்க முயற்சி செய்வோம். அடிக்கடி இவ்வாறு வாழ்க்கையைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, எங்கெங்கு நாம் பிழைகள் செய்தோம், எங்கெங்கு நாம் நம்மைத் திருத்திக்கொள்ள முடியும், என்றெல்லாம் பேசுவோம். இந்த ஆராய்ச்சி (Analysis) வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பற்றியதாகவே இருக்கும். வேலை வாய்ப்புகள், கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்வது, என்னுடைய எழுத்து வேலை, பொருளீட்டுவது, குழந்தையின் கல்வி, அவள் கொண்டிருக்கும் கலையார்வம், அவளது அறிவு, மன வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவி செய்வது, அவளது மொழிப் பயிற்சியை எங்கே நடத்துவது - என்பது பற்றியெல்லாம் பேசுவோம். வாழ்க்கையின் வேகத்தோடு நாமும் கூடவே ஓடிப் போகாமல் சற்றே நின்று இருவரும் சேர்ந்து சிந்திப்பது எங்களுக்குப் பெரிதும் பயனளித்தது; சுவையாகவும் இருந்தது.
"மேற்குத் தேசத்தார் தங்களுடைய அபிவிருத்தியைப் பவுன், ஷில்லிங், பென்ஸ் என்று கணக்குப் போட்டுப் பார்ப்பது" போல் நாங்களும் பார்ப்பதுண்டு. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வாழும் எங்கள் உறவினர்கள், நண்பர்களின் செல்வ நிலை, கல்வித் தகுதிகள் முதலியவற்றை எங்கள் நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் உண்டு. இந்த ஒப்பீடு மற்றவரிடம் குறை கண்டுபிடிப்பதற்காக அன்று. வாழ்க்கையில் இறைவனருள் எங்களுக்குக் கிடைத்திருப்பதற்கு நன்றி செலுத்தும் பொருட்டே. நாங்கள் எங்கள் வாழ்க்கையை நடத்திய வகையில் எங்களுக்குத் திருப்தியுண்டு. எங்கள் மகளின் வளர்ச்சியில் எங்களுக்குப் பெருமையுண்டு.
வாழ்க்கையில் சற்றே ஓய்வு கிடைத்தபின் - பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் - தமிழ்நாட்டிலும் கனடா நாட்டிலும் வருஷத்தில் ஆறாறு மாதங்கள் வாழ்வதாக முடிவு செய்தோம். இங்கு வந்தபின்.....
இங்கே நமது பிரச்சினைகள் சிலவற்றைச் சற்றே ஆராய்ந்து பார்ப்போம்:
இளைஞர்களிடையே 'வெளிநாடு செல்ல வேண்டும்' என்ற ஆவலும் துடிப்பும் இன்று தீவிரமாகக் காணப்படுகிறது. இந்த விருப்பத்திற்குக் கல்வி முதலிய சில காரணங்கள் அடிப்படையாக இருந்தாலும், பொதுவாக, பணம் சேர்க்க வேண்டுமென்பதும், வெளிநாடு சென்று வருவதால் வரக்கூடிய 'கௌரவம்' பெற வேண்டும் என்பதும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
'பொருள் வேண்டும்' என்பது இன்று நம்முடைய நோக்கங்களில் முதலாவதாக நிற்கிறது. பொருள் வேண்டியதுதான். "பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்". "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று நமது முன்னோர் நமக்கு அறிவுரை வழங்கினார்கள். பொருளால் வந்து சேரக்கூடிய வாழ்க்கை வசதிகளை விரும்புவதிலோ, அவற்றை அடைய முயற்சிகள் செய்வதிலோ தவறில்லை.
"காணி நிலம் வேண்டும். அந்தக் காணி நிலத்தில் அழகியதொரு மாளிகை வேண்டும். கேணியும் தென்னை மரமும் இளநீரும் நிலவொளியும் குயிலோசையும் தென்றலும் பாட்டும் கவிதையும் பத்தினிப் பெண்ணும் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அன்னையின் அருளும் அவள் காவலும் இங்கே நமக்கு வேண்டும்," என்று விரும்பினார் பாரதி. "உப்புக்கும் கூழுக்கும் நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பராசக்தி, உன்னை நான் எப்படிப் பாடுவேன்?" என்று பராசக்தியிடம் முறையிட்டார் பாரதி. வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே நம் சக்தியும் சிந்தனையும் பயன்படுத்தப்பட்டு விட்டால், உயர்ந்த விஷயங்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்க முடியும்? வாழ்க்கையில் எந்தக் காரியத்தைத்தான் நாம் சாதிக்க முடியும்?
"தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை," என்று வலியுறுத்துகிறார் பாரதி.
பொருள் வேண்டும்; நல் வாழ்க்கை வாழுவதற்காக.
பொருள் வேண்டும்; நம் அழகுணர்ச்சியை நிறைவுசெய்யும் பொருட்டாக.
செல்வம் வேண்டும்; நம் கலையுணர்ச்சியை வளப்படுத்தும் பொருட்டாக.
செல்வம் வேண்டும்; நாம் உயர் பண்புகளை எய்தும் பொருட்டாக.
திருமகளின் அருள் வேண்டும்; நாம் "வானை நோக்கிக் கைகள் தூக்கி" வளரும் பொருட்டாக.
ஹிந்துமதப் பெரியோர்கள் நாம் கடைப்பிடிக்க வேண்டிய 'ஆசாரங்கள்' இன்னவை என்று எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆசாரங்கள் என்பவை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்; இன்னது செய்யலாம், இன்னது செய்யக்கூடாது என்று ஹிந்துமதம் வரையறுத்துக் கூறிய கோட்பாடுகள். இந்த ஆசாரங்கள் யாவும் ஒரே இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டன. இந்த இலட்சியம், 'மனிதனின் சிறுமையை விலக்கி அவனை உயர்ந்த நிலைக்கு உயரச் செய்ய வேண்டும்' என்பதே. ஹிந்துமதம் இந்த இலட்சியத்தை அடையச் செய்வதற்கான கொள்கைகளையும் பண்புகளையும் வலியுறுத்துகிறது. இந்த மதக் கோட்பாடுகள் நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பிணைந்து, இலட்சியத்தை நோக்கி நம்மை வழிப்படுத்துகின்றன.
நமது கவனம் திசை திரும்பிப் 'பணமே குறி' என்று ஆகிவிட்ட பிறகு, 'செல்வம் தேடுவதே ஒரு பெரிய தர்மம்' என்று நினைக்கத் தொடங்கிவிட்ட பிறகு, இந்த ஆசாரங்கள் யாவும் காப்பாற்றுவார் இல்லாமல் மறைந்துபோகத் தொடங்கிவிட்டன. வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களுக்கெல்லாம் மதிப்பில்லாமல் போய்விட்டது. அன்பு, அருள், கருணை, தியாகம், பாசம், கடமை, முதலிய உயர்ந்த பண்புகளெல்லாம் தம் பொருளை இழந்துவிட்டன. ஆசாரங்களைக் கடைப்பிடித்திருந்த பொழுது உலகம், நாடு, ஊர், நண்பர்கள், உறவினர்கள் என்று நம்மைச் சுற்றியிருந்த மிகப்பெரிய வட்டம் சுருங்கிப்போய்த் தான், தன் மனைவி, தன் மக்கள் என்று மிகச் சிறிய புள்ளியாகக் குறுகிப் போய்விட்டது.
கல்வி - உலக சம்பந்தமான அறிவு, செய்திகளைப் பெறுவதற்கான வழிவகைகளைப் பயில்விப்பதோடு, ஆத்ம ஞானம் பெறுவதற்கும் வழிகாட்டுவது என்று நமது பெரியோர் கண்டனர். கல்வி, மனத்தின் குழப்பங்களை நீக்கி, அறிவிலே தெளிவை நிறுத்துவது. பணப் பேராசையை நீக்கிவிட்டால், வித்தைகளைப் பயின்று, அவற்றின் ஸாரத்தைக் கிரஹித்துக் கொள்ளக்கூடிய அறிவுத் தெளிவு நமக்கு வசப்பட்டுவிடும்; அதுவே நமக்கு இயல்பாகவும் ஆகிவிடும்.
"பொன்னைக் காட்டிலும் அதிக உண்மை காட்டவேண்டும். அதிகாரத்தைக் காட்டிலும் அதிக தீரம், சுயநலத்தைக் காட்டிலும் அதிக ஈகை - இவை வேண்டும். நமது வீடுகளையும், அரண்மனைகளையும், கோவில்களையும் பணக்கோலம் குறைவாகவும் குணக்கோலம் அதிகமாகவும் விளங்கச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் பாரதி.
சமுதாயத்தின் ஒவ்வொரு படியிலும் நாம் 'பொருள் வாழ்க்கை'யை (material) நோக்கிச் செல்வது - இன்றைய புதிய மனப்போக்கின் (attitude) நிலை. இது வெளிநாட்டு வாழ்க்கை முறை, மனப் போக்கு முதலியவற்றின் தாக்கம் என்பது மட்டுமல்ல. இங்கேயும், வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் தொடங்கி, எந்தச் செயலில் ஈடுபடுவதற்கும் பணம் இருந்தால்தான் முடியும் என்று ஆகிவிட்டது. நமது குழந்தைகளுக்குப் பள்ளியில் இடம் பிடிக்க வேண்டுமா? நம் இளைஞர்களை உயர் கல்வி கற்பதற்கு அனுப்ப வேண்டுமா? பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டுமா? பையன் நல்ல வேலையில் சேர வேண்டுமா? - இவற்றுக்கெல்லாம் பணம் கையில் தாராளமாகப் புழக்கத்தில் இருக்க வேண்டும். 'லஞ்சம்' கொடுத்தால், இந்தக் காரியங்களை எளிதில் சாதித்துக்கொள்ள முடியும் என்பதோடு, பணமும் செல்வாக்கும் உள்ள 'பெரிய' மனிதர்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியமாகிவிட்டது.
இதற்குக் காரணம் என்ன? நம் தேசத்தின் பொருளாதார நிலையா? அரசியலா? ஜனப்பெருக்கமா? வளக்குறைவா? சமுதாயத்தின் மனப்போக்கா? இவை யாவுமே சேர்ந்து உருவாக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையா? சமுதாயம் சூழ்நிலையைக் குற்றம் சொல்லுகிறது. இது நியாயம்தான். பொதுவாக, சமுதாயத்தின் மனப்போக்கை, கொள்கைகளை, இலட்சியங்களை உருவாக்குவதும் திசைதிருப்பி விடுவதும் சூழ்நிலை. நமது பொருளாதாரமும் அரசியலும் ஜனப் பெருக்கமும் வளக் குறைவும் சேர்ந்து உருவாக்கிவிட்ட அபாயகரமான சூழ்நிலை, நம் சமுதாயத்தின் மனப் போக்கை, சிந்தனையை வெகுவாகப் பாதித்துவிட்டது என்பதுதான் உண்மை.
ஜனத் தொகை கட்டுக்கு மீறிப் போய்விட்டது. இந்த ஜனத் தொகையில் பாதிப் பேருக்கு மேல் ஒருவேளைச் சோற்றுக்கும் கூட வழியற்ற ஏழைகள். மீதியுள்ளவரில் பெரும்பாலோர் செல்வத்தை எண்ணி ஏங்கும் 'நடுத்தர' வகையினர். பணம் உள்ளவன் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பதையும், நவீன வசதிகள் நிறைந்த ஆடம்பர வாழ்க்கை வாழுவதையும் பார்த்து இவர்கள் மயங்குகிறார்கள். பணம் இருந்தால் இந்தச் சமுதாயத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம் என்ற நிலை இருக்கும்போது, இவர்களை எப்படிக் குறைசொல்ல முடியும்?!
சமுதாயத்தில் புதிய, வேறுபட்ட சூழ்நிலையை உருவாக்க வேண்டுமானால், முதலாவதாக நமது சமுதாயத்தின் அமைப்பில் (structure) சில மாறுதல்கள் நிகழ வேண்டும். நமது கல்வித் திட்டம், உயர் கல்வி, திருமணம், முதியோரின் பாதுகாப்பு, உடல், மன நலமற்றவர்களின் சிகிச்சை - என்று நிகழ வேண்டிய மாறுதல்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
சமுதாயத்தின் வெளியமைப்பில் மாறுதல்கள் நிகழ வேண்டும் என்பதற்கும் மேலாக, நமது மனப்போக்கில், சிந்தனையில் அடிப்படையான சில மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெளிநாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து, பல நாடுகளையும் சுற்றிப் பார்த்து அந்தந்த நாடுகளில் நான் கண்டுணர்ந்த வாழ்க்கை அனுபவத்தால் - இங்கு திரும்பி வந்து இந்தச் சமுதாயத்தை நோக்கும்போது என் பார்வையில் சில விரும்பத்தகாத மாறுதல்கள் தென்படுகின்றன. பாரதி சமுதாயத்தின் அடிமனத்திலிருந்து நீக்க விரும்பிய சில தீமைகளும் பொய்மைகளும் இன்னும் விலகாமல் - சொல்லப் போனால் அவை மேலும் வலிவு பெற்று சமுதாயத்தைத் தவறான பாதையில் நடத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.
நமது நாடு 'முதலாவது' நாடுகளுள் ஒன்றாகும் முயற்சியில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு வேண்டிய கல்வித் தகுதிகள், சாதனைகள், தொழில்கள், பொருளாதாரம் இவற்றை நாம் அடைய அயராத ஊக்கமும் உழைப்பும் தேவை.
இதோ சில காட்சிகள்:
நாம் இன்னும் செய்யும் காரியங்களுக்கெல்லாம் நாளும் கிழமையும் இராகு காலமும் யமகண்டமும் பார்த்துக்கொண்டு, வாரத்தில் ஒவ்வொரு நாளும் பொங்கல், புளியோதரை, எலுமிச்சம் சாதம், தயிர் சாதம் என்று வகை வகையாகப் படையல்கள் படைத்து, கிரக மாறுதல்களுக்குப் பரிகாரங்கள் செய்து கொண்டிருந்தால்.... - நாம் எங்கே போகிறோம்?
கல்யாண மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன. காசு பணம் இல்லாதவர்கள், கடனோ உடனோ வாங்கி ஆயிரக்கணக்கான ரூபாய்கள் திருமணத்திற்காகச் செலவு செய்கின்றனர். வரதட்சணைப் பழக்கம் இன்னும் சமுதாயத்திலிருந்து மறையவில்லை. - நாம் எங்கே போகிறோம்?
பெரிய கோயில்களில் ஜனங்கள், இறைவனைத் தரிசிக்கும் பொருட்டு 'கியூ'வில் நிற்கிறார்கள். ஆங்காங்கே கயிறுகள் கட்டப்பட்டு அவர்களை இறைவனை நோக்கி 'வழிப்படுத்தும்' இடங்களில், மக்கள் பாதையிலிருந்து விலகிவிடாதபடி மேற்பார்வை செய்ய ஆட்கள். பணக்காரர்கள், பதவியில் உள்ளவர்களுக்குத் தனிச் சலுகை. - நாம் எங்கே போகிறோம்?
திரையில் காதலனும் காதலியும் ஒருவரையொருவர் துரத்திப் பிடிக்கிறார்கள். அங்கங்கள் தெரிய உடையணிந்த காதலி, காதல் காட்சிகள். 'குரூப்' நடனம், 'நைட் கிளப்', குடி, 'பார்ட்டி' - இவை இன்றைய திரைப்படங்களுக்கு மிகவும் அவசியமான காட்சிகள். இன்றைய இளைஞர்கள் அவற்றை விரும்புகிறார்கள் அல்லவா? ஒருவேளை இவை மாறிவரும் இன்றைய சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்றனவோ? ஒருவேளை நான் இன்னும் 'பழைய' காலத்திலேயே இருக்கிறேனோ?
வேறு என்ன முக்கியமான வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒத்திப் போட்டுவிட்டு, அல்லது புறக்கணித்துவிட்டு, சின்னத் திரையின் முன் அமர்ந்து 'சீரியல்' பார்க்கும் பெண்கள். பள்ளிக்குச் செல்லும் இளம் சிறுவர் முதல், இளைஞர், நடுத்தர வயதினர், முதியோர் என்று இதில் வயது வேறுபாடு ஏதும் இல்லை. ஆண் பெண் வேறுபாடு இல்லை. திரையில் கணவன் மனைவியை அடிக்கிறான்; மகன் தாயைத் தவறாக நடத்துகிறான்; மாமியார் மருமகளைத் துன்புறுத்துகிறாள்; மருமகள் மாமியாரைக் கொடுமைப்படுத்துகிறாள். இன்னும் என்னென்னவோ! கொலை, கொடுமை, அடி, உதை, கடுமையான விவாதங்கள், அழுகை, இரைச்சல். - நாம் எங்கே போகிறோம்?
பத்திரிகையைப் பிரித்தால் அதில் நடிக நடிகையரின் விருப்பு வெறுப்புகள், அழகின் ரகசியம், காதல் அனுபவங்கள், சமையல் குறிப்புகள், ஜோசியம். இனிய தமிழ் மொழி, ஆங்கிலம் கலந்து ஒரு புதிய மொழியாகவே காட்சி அளிக்கிறது. சொற்றொடர்கள் ஆங்கிலப் பாணியில் உருவாக்கப்பட்டு, புதிய கருத்துகள் பொருத்தமில்லாத வகையில், ஆங்கிலச் சொற்களுக்கு ஏற்ற தமிழ் வடிவங்களில் காணப்படுகின்றன. - நாம் எங்கே போகிறோம்?
எனினும் -
நமது நாடு, "ஞானத்தில் உயர்ந்தது; கானத்திலும் கவிதையிலும் ஒப்பற்றது; தீரத்திலும் வீரத்திலும் சிறந்தது; அறத்திலும் கருணையிலும் தலையாயது; வண்மையிலும் உண்மையிலும் ஓங்கியது; உளத் திண்மையிலும் மதிநுண்மையிலும் ஈடு இணையற்றது."
மெய்ஞ்ஞானத்தை அரசியலில் பிணைத்து, உலகத்திற்குப் புதுநெறி காட்டிய பாரதம்; பல்விதமான சாத்திரங்களையும், வேதங்களையும், கீதை முதலிய ஞான நூல்களையும் படைத்தளித்து உலகிற்கு ஆத்ம ஞானத்தை உணர்த்திய பாரதம்; "எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்," என்ற ஆத்மிக உணர்வில் பிறந்த சமத்துவத்தை உலக முழுவதற்கும் அறிவுறுத்திய பாரதம்; "தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்," என்ற உயிர்த் துடிப்பை உலக முழுவதும் பறைசாற்றிய பாரதம்; "எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறை"யை உலகிற்கு எடுத்தோதக்கூடிய தகுதியும் சிறப்பும் பெற்ற பாரதம்.
தனிமனிதன் திருந்தினால் சமுதாயம் திருந்தும்; சமுதாயம் திருந்தினால் தனிமனிதன் திருந்துவான். தனிமனிதன் இதைச் சமுதாயத்தின் பிரச்சினை என்று கருதி அலட்சியமாக இருந்துவிடுகிறான்; 'சமுதாயச் சீர்திருத்தவாதிகள், பொருளியல் நிபுணர்கள், அரசியலில் பொறுப்பு ஏற்றிருப்பவர்கள், சமயத் தலைவர்கள் - இவர்களெல்லாம் சேர்ந்து தீர்க்கவேண்டிய பிரச்சினையை நான் ஒருவன் மட்டிலும் தனியாக எப்படித் தீர்க்க முடியும்' என்று அவன் ஒதுங்கிவிடுகிறான். சூழ்நிலையின் அழுத்தத்தை மீறிக்கொண்டு வாழக்கூடிய உள்வலிமை அவனுக்கில்லை. எனினும், தனி மனிதர்களின் கூட்டாக உருவாகியிருக்கும் சமுதாயத்தின் இந்தப் பிரச்சினையைத் தனி மனிதர்கள் தானே தீர்த்தாக வேண்டும்?
அறிவுத் தெளிவு என்ற தீயை, ஆர்வக் கனலை நமது நெஞ்சிலே நிலைநிறுத்திக் கொள்வோமானால் இந்த முயற்சி நமக்கு மிக எளிதாகிவிடும். இந்தத் தீ நமது வீட்டில் தொடங்கி, நமது கோயில்களிலும், தொழிற்சாலைகளிலும், கல்வி நிலையங்களிலும், கலைக்கூடங்களிலும், வணிகர் மாளிகைகளிலும் தெருக்களிலும் காற்றிலும் நமது மூச்சிலும் பரவி நமது பண்பாட்டை உயிர்ப்பித்து மீண்டும் உயர்வடையச் செய்யும்.
May 07, 2009
* Do not use semicolon(;)