
தமிழ்ப் பாரம்பரிய மையம் என்ற அமைப்பினைப் பேராசிரியர் சுவாமிநாதன், காந்தி மையம் அண்ணாமலை, கிழக்கு பதிப்பகம் பத்ரி மற்றும் டி.கே. ராமசந்திரன் I.A.S ஆகியோர் தொடங்கி, நடத்தி வருகின்றனர். நம் நாட்டின் கலை, கலாசாரம், பாரம்பரியம் பற்றிய பெருமைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்துரைத்து, அவற்றைப் பேணவேண்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மையத்தின் நோக்கம்.
2008ஆம் ஆண்டு முதல் மாதம்தோறும் முதல் சனிக்கிழமைகளில் தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் இம்மையம் கூடி வருகிறது. அகழ்வராச்சியாளர் நாகசாமி, ஸ்தபதி கே.பி. உமாபதி, அசீமா அறக்கட்டளை இயக்குநர் வீ.ஆர்.தேவிகா என்று பல பிரபலங்கள், கலைஞர்கள், மேதைகள் இங்கு விரிவுரைகள் நிகழ்த்தி உள்ளனர். முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, 03.10.2009 அன்று, நாட்டிய மேதை பத்மபூஷன் தனஞ்செயன், 'பழங்கலைகளும் மனித பாரம்பரியமும்' என்ற தலைப்பில் ஒரு சிறப்புரை ஆற்றினார். கலை, கலாச்சாரம் என்பது எப்படி பாரத நாட்டில் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது என்று அவர் பேசியது மனத்திற்கு மிகவும் நெருக்கமான உரையாக அமைந்தது.
இந்தியா என்ற பெயரை மாற்றி, நம் நாட்டிற்கு மீண்டும் பாரதம் என்ற பெயரைச் சூட்டவேண்டும் என்று முழங்கினார். "பாரம் தாரயதி பாரதம்" என்ற கூற்றின்படி பாரம் என்றால் 'அஞ்ஞானம்'; ஆகவே இதற்கு, 'அஞ்ஞானம் போக்கும் புண்ணிய பூமி" என்று பொருள். இந்தியா என்ற பெயர் வெளிநாட்டவர் கொடுத்தது; அதை நாம் துறக்கவேண்டும் என்றார் இவர்.
கலை, கலாச்சாரம் என்பது ஒரு மனிதனை ஒழுங்குபடுத்துகிறது. அதிலும் பழைமைக்குரிய (classical) சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகள் ஐம்புலன்களையும் ஒருங்கிணைக்க உதவுகின்றன. அதுவே ஒரு சிறந்த தவமாக வெளிப்படுகிறது என்பது இவர் கருத்து. மேலும் - இன்றைய கல்வி முறை கலையையும் ஆன்மீகத்தையும் ஒருங்கிணத்து வழங்கவேண்டும், ஆன்மீகம் என்பது மொழி, மதம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது, எந்த மொழியிலும் மதத்திலும் நல்ல கருத்துகள் இருந்தால் அதை வரவேற்க வேண்டும் என்றார் தனஞ்செயன்.
வாழ்வில் நாம் சிறந்த ஞானத்துடன் விளங்க மூன்று செயல்கள் அவசியம் என்றார். சமஸ்க்ருதத்தில் 'ஷ்ரவணம், மனனம், வசனம்', அதாவது கவனத்தில், ஆராய்தல், பேசுதல்'. ஒருவர் கூறுவதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். பின்பு ஆராய்ந்து பேசுதல் வேண்டும். இத்தகைய மேன்மையான குணங்களைக் கலையும் பாரம்பரியமும் நமக்கு வழங்குகின்றன. இன்றைய தலைமுறை பல கருத்துகளை மூட நம்பிக்கையாகக் கருதி கலாசாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்கள். அப்படியல்லாமல், அவர்கள் நம் முன்னோர்கள் கூறியுள்ள கருத்துகளில் நல்லனவற்றை எடுத்துக்கொண்டு, பின்பற்றி, இந்தியர் என்னும் முகவரி தொலைந்துவிடாமல் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் வீணை வித்வான் காரைக்குடி சுப்பிரமணியம் மற்றும் பல கலை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இனி வரும் நிகழ்ச்சிகள் குழந்தைகளையும் சென்று சேர்ந்தடைய வேண்டும் என்ற நோக்கோடு அமைக்க இருப்பதாக சுவாமிநாதன் தெரிவித்தார்.
தமிழ்ப் பாரம்பரிய மையத்தின் கூட்டம், மாதா மாதம் முதல் சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்குச் சென்னை தி.நகர், தக்கர் பாபா பள்ளிக்கூடத்தில் நடைபெறும். யாவரும் வரலாம், அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க:
Annamalai: காந்தி கல்வி மையம் - gandhicentre@gmail.com; 94441-83198
Badri Seshadri: கிழக்குப் பதிப்பகம் - badri@nhm.in;
TK.Ramachandran, IAS : த.நா. குடிசை மாற்று வாரியம் - tkramachandranias@hotmail.com;
S.Kannan: (98414-47974)
S.Swaminathan: Marg Constructions - sswami99@gmail.com; 24611501
Oct 13, 2009
* Do not use semicolon(;)