நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு, ஓசையின்றி, அயராமல் பாடுபட்டுவரும் இரு துறைகள், அஞ்சல் துறையும் ரயில் போக்குவரத்துத் துறையுமே என்றால் மிகையாகாது.
'ரயிலே ரயிலே' என்று கலைவாணர் என்.எஸ்.கே. பாடுவார். 'பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் செய்ய முடியாததை நீ செய்கிறாய். பல்வேறு மதத்தினரையும் ஜாதியினரையும் ஒரே பெஞ்சில் (இருக்கையில்) உட்காரவைத்து ஒருமைப்பாட்டை வளர்க்கிறாய். உன்னைக் கடவுளுக்குச் சமமாகக் கூடச் சொல்லலாம். கடவுளுக்கு உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் ஒரே அன்பு. நீயும் டிக்கெட் உள்ளவர்களையும் இல்லாதவர்களையும் அழைத்துச் செல்கிறாய்." இப்படி, பல வகையில் புகழ்வார், ரயிலை.
குமரியிலிருந்து கஷ்மீரம் வரை நம்மை அழைத்துச் செல்வது நமது ரயில்வே துறை தானே! ஏற்கெனவே, சென்னை-தில்லி (நிஸாமுத்தீன்) துரந்த (அதிவேக) ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. திருநெல்வேலி - பிலாஸ்புர் வாராந்திர அதிவிரைவு ரயில்; திருநெல்வேலி - ஹாபா அதிவிரைவு வார இருமுறை ரயில் (திருவனந்தபுரம், எர்ணாகுளம் வழி); மதுரை வழியாக ராமேஸ்வரம் - கன்யாகுமரி எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் - ஷொரனூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை விரைவில் ஓடத் தொடங்கும்.
இன்னும் பல நல்ல செய்திகள் உள்ளன. ஜம்முதாவி - மதுரை வாராந்தர ரயில், திருநெல்வேலி வரை ஓடும். மங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ், புதுச்சேரி வரை ஓடும். எர்ணாகுளம் - திருச்சி எக்ஸ்பிரஸ், நாகூர் வரை செல்லும். இப்போது வாரம் மூன்று நாள் செல்லும் சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ், இனி நாள்தோறும் ஓடும்.
பயணிகள் வசதிக்காக, பல சிறப்பு ரயில்களையும் ரயில்வே துறை இயக்கி வருகிறது. இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை ஆயிரத்து இருபது சிறப்பு ரயில்களை இயக்கியிருக்கிறார்கள். சபரிமலை சீசனையொட்டி 120 சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. இதேபோல பொங்கலுக்கும் புத்தாண்டுக்கும் ஏராளமான சிறப்பு ரயில்களை - குறிப்பாக, தூத்துக்குடி, நாகர்கோயில், கோயம்புத்தூருக்கு - இயக்கப் போகிறார்களாம்.
அண்மையில், ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தை வெளியிட்டபோது, இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்கள்.
உங்கள் பயணம் இனிய பயணமாக அமையட்டும்!
Oct 31, 2009
* Do not use semicolon(;)