இங்கிலாந்து அரசியல் மேடை களை கட்டத் தொடங்கிவிட்டது. செப்டெம்பர் மாதம் வந்து விட்டாலே ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி மாநாட்டில் கூத்தாடத் தொடங்கி விடுவார்கள். இம்முறையோ....? கூத்தாட்டத்திற்கு கேட்கவும் வேண்டுமா?
2010ஆம் ஆண்டு மே மாதம் முதலாவது வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து அரசாங்கத்தில் இருக்கும் கட்சியான லேபர் கட்சி ஆளாகியுள்ளது. ஆமாம் அவர்களது ஆட்சிக் காலம் ஜந்து ஆண்டுகள் முடிவுக்கு வரும் வேளையது.
ஆனால் அது லேபர் கட்சி விரும்பி எதிர்கொள்ளும் ஒரு தேர்தலாக இருக்காது. என்ன காரணம் என்கிறீர்களா? அரசியல் கட்சிகளில் எதற்கு வாக்களிப்பீர்கள் என்னும் கருத்துக் கணிப்பில் லேபர் கட்சி மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதே அதன் காரணம்.
1977ஆம் ஆண்டு டோனி பிளேயர் அவர்களின் தலைமையில் அமோக வெற்றியீட்டி அரியணையில் அமர்ந்த லேபர் கட்சி, பன்னிரண்டு வருடங்களின் பின்னால், தொடர்ந்து மூன்று தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால், எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே 47 வயது நிரம்பிய டோனி பிளேயரின் இளம் முறுக்குக் கொண்டு துணிகரமான பேச்சுகளில் தமது நம்பிக்கையை வைத்த மக்கள் அவர் பின்னால் அணிதிரண்டதற்குக் காரணம், தொடர்ந்து பதினெட்டு வருடங்கள் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியின் கீழிருந்த மக்கள், அக்கட்சியின் கொள்கைகளின் மீது கொண்ட வெறுப்பும் அப்போதைய பொருளாதார நெருக்கடியும் ஆகும்.
ஜனநாயகக் கோட்பாடுகளின் கீழ் நடக்கும் தேர்தல்களில் ஒரே கட்சி, பல முறைகள் ஜெயிப்பது மிகவும் கடினமான நிலையையே அக்கட்சிகளுக்குத் தோற்றுவிக்கின்றது. ஏன் என்கிறீர்களா?
ஒரு கட்சி தேர்தல் காலத்திலே தாம் பதவிக்கு வந்தால் தாம் எடுக்கப் போகும் நடவடிக்கைகளை அப்பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தில் நிறைவேறக்கூடிய கொள்கைப் பிரகடனங்களாக முன் வைக்கிறார்கள். ஆனால் பல கொள்கைகள் சட்ட மூலமாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வேளையில் பதவிக் காலத்தின் பெரும் பகுதி முடிவடைந்து விடுகிறது. அவர்களின் கொள்கைகளின் அனுகூலங்களை முழுமையாகச் செயல்முறைப்படுத்த பல சமயங்களில் அவர்களுக்கு மற்றொரு பாரளுமன்றப் பதவிக் காலம் தேவைப்படுவது யதார்த்தம்.
ஆனால் அதே கட்சி மூன்று அல்லது நான்கு முறை தொடர்ந்து வெற்றியீட்டும் போது, அவர்களுக்குக் கொள்கை வங்குரோத்து ஏற்பட்டு விடுகிறது. எனவே முன்பு தாங்கள் நிறைவேற்றிய கொள்கைகளையே மீள்பரிசீலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பழைய கொள்கைகளைப் புதிய உறையில் போட்டு விற்பனை செய்ய முயல்கிறார்கள். இது பெரும்பான்மையாக மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கைக் குன்றச் செய்து விடுகிறது.
லேபர் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததற்கு இது மிகவும் முக்கிய காரணமாகிறது. அடுத்து ஈராக் யுத்தம் ஆரம்பம் முதலே மக்கள் மத்தியில் செல்வாக்குக் குன்றிய ஒரு நடவடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தோடு தற்போதைய ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் நோக்கம், மக்களுக்கு சரிவரத் தெளிவாக விளக்கப்படாமலே இருக்கிறது.
தொடர்ந்து ஆப்கானிஸ்தான் யுத்தக் களத்திலே உயிரிழக்கும் பிரித்தானிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அரசாங்கத்திற்கு தலையிடியும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
அது மட்டுமா? அத்தோடு வந்து சேர்ந்த உலகப் பொருளாதார வீழ்ச்சி கொடுத்த தாக்கம், அப்பொருளாதார வீழ்ச்சி உலக அளவிலே ஏற்பட்டது என்றாலும் பிரித்தானிய அரசின் மீதே மக்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்னியது.
பொருளாதார வீழ்ச்சி அடிக்கோட்டைத் தாண்டி இப்போது கொஞ்சம், கொஞ்சமாக முன்னேற்றம் காணத் தொடங்கியுள்ள போதும் மேற்கூறிய காரணங்கள் கொடுத்த தாக்கங்கள், மக்களின் வெறுப்பை லேபர் கட்சியின் மீது அதிகரிக்கவே செய்திருக்கின்றன.
அத்தோடு தற்போதைய இங்கிலாந்துப் பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, படுவீழ்ச்சியடைந்து இருக்கிறது.
ஆங்கிலத்தில் ஒன்று சொல்வார்கள் 'உன்னுடைய திறமை மற்றவர்களால் நீ கடைசியாக விட்ட தவறிலிருந்தே கணிக்கப்படுகிறது" (You are only as good as your last mistake). இதன் அர்த்தம் என்னவென்றால் எவ்வளவோ திறமையாகப் பல காரியங்களைச் சாதித்தவர்களாய் இருந்தாலும் உன்னுடைய கடைசிப் பிழை மட்டுமே மக்கள் மனத்தில் பதியும்.
இதன் அடிப்படையில் கோர்டன் பிறவுண் நிதியமைச்சராக இருந்த காலத்தில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும் அவர் பிரதமராக இருந்த நேரத்தில் அவர் சில சமயங்களில் எடுத்த தவறான முடிவுகளே மக்கள் மனத்தில் நிலைத்திருக்கிறது.
சமீபத்தில் உலகெங்கிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, இங்கிலாந்தை அதிக அளவில் பாதித்தது என்பது உண்மையே. ஆனால் அப்பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த கோர்டன் பிறவுண் உலக அளவில் பல நாடுகளுக்கும் சென்று எடுத்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி மிகவும் காரசாரமாக விமர்சித்தது.
ஆனால் தற்போதைய கணிப்புகளின்படி பிறவுணின் நடவடிக்கைகள் சரியானவை போலத் தென்படுகிறது. ஆயினும் மேற்காட்டிய பல காரணங்களினாலும் இது அவரின் அரசியல் செல்வாக்கை எந்த அளவிலும் உயர்த்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்தப் பின்னனியில் சமீபத்தில் லிபரல் கட்சி, லேபர் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி ஆகியவற்றின் வருடாந்த மாநாடுகள் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றன.
அனைத்துக் கட்சிகளும் சொன்ன பொதுவான கருத்து, இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சியை மட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இங்கிலாந்து நாட்டின் கடன் அதிகரித்து இருக்கிறது. அதைக் குறைப்பதற்காகச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியது அவசியம் என்பதையே. ஆனால் இதை எவ்வாறு கைக்கொள்ளப் போகிறார்கள் என்பதிலேயே அவர்களின் வேறுபாடுகள் தென்படுகின்றன.
பல கொள்கைப் பிரகடனங்களை ஆளும் கட்சியான லேபர் கட்சி அவிழ்த்து விட்டுள்ளது. அக்கட்சி மாநாட்டிலே உரையாற்றிய கோர்டன் பிறவுணின் உரையை, அவர் இதுவரை ஆற்றிய உரைகளிலேயே சிறந்தது என்று அரசியல் அவதானிகள் பலர் கருத்துக் கூறியிருக்கிறார்கள். இருப்பினும் இது அடுத்த தேர்தலில் லேபர் கட்சியின் வெற்றி வாய்ப்பைக் கூட்டியுள்ளதா? என்பது சந்தேகமே என்பது அவர்களினது அபிப்பிராயம்.
சரி இனி அடுத்த தேர்தலில் அமோக வெற்றியீட்டப் போகிறது என்று எதிர்பார்க்கும் கன்சர்வேடிவ் கட்சி என்ன கூறுகிறது என்று பார்ப்போமா?
கன்சர்வேடிவ் கட்சி மாறி, மாறித் தலைவர்கள் பலரை ஏற்றி, இறக்கி, தற்போது டேவிட் கமரன் அவர்களின் தலைமையின் கீழ் ஸ்திரமடைந்திருப்பது போலத் தென்படுகிறது.
டேவிட் கமரன், கன்சர்வேடிவ் கட்சிக்குள் புகுந்தபோது சோர்ந்திருந்த ஒரு பூங்காவினுள் ஒரு பூந்தென்றல் அடித்தது போல இருந்தது. ஆம் இள வயதினரான டேவிட் கமரன், அக்கட்சியினுள் ஒரு உத்வேகத்தைப் புகுத்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1997ஆம் ஆண்டு லேபர் கட்சியின் செல்வாக்கு மாற்றத்துக்கு டோனி பிளேயர் எவ்வாறு காரணமாக இருந்தாரோ, அதேயளவு கன்சர்வேடிவ் கட்சியின் செல்வாக்கு மாற்றத்துக்கு டேவிட் கமரன் காரணமாக இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது.
சலித்திருக்கும் பிரித்தானிய மக்களின் மனத்தில் ஒரு புதிய உத்வேகம் உள்ள டேவிட் கமரன், ஒரு புதுவிதமான மாற்றத்தைத் தம் வாழ்வில் கொண்டு வருவார் என்று ஒரு நாம்பிக்கை ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
அது மட்டுமல்ல; ஊடகங்களும் கொஞ்சம், கொஞ்சமாக லேபர் கட்சி அடுத்த தேர்தலுடன் எதிர்க்கட்சி ஸ்தானத்தை அடையப் போகிறது என்பது போல தமது கருத்துகளைக் கூறத் தலைப்பட்டுள்ளார்கள்.
அதேசமயம் டேவிட் கமரன் மீது சாதாரண மக்களின் அடிப்படைத் தேவைகளை உணரக்கூடிய தன்மை இல்லாதவர் என்னும் குற்றச்சாட்டு ஒரு பகுதியினரிடமிருந்து எழுகின்றது. ஏனெனில் அவர் மிகுந்த செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது படிப்பு முழுவதையுமே செல்வந்தர்களுக்கே உரிய பிரத்தியேக பாடசாலைகளில் முடித்தவர். அவருக்கு சாதாரண மக்களின் அல்லல்கள் புரியுமா? என்பது அவர்களது கேள்வி.
ஆனால் கமரனோ, தான் எதையும் மக்களிடம் மறைக்கப் போவதில்லை; தனது கொள்கைகள் அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக மக்கள் முன் வைக்கப் போகிறேன். நேர்மையும் உண்மையுமே எனது ஆயுதங்கள் என்று மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்.
பல துணிகரமான, எவை மக்களுக்கு அலுப்பைத் தந்தனவோ அவையனைத்தையும் தவிர்க்கும் வகையிலான கொள்கைகளை முன் வைத்து வருகிறார். ஆனால் எதற்குமே தெளிவான விளக்கங்கள் அவர்களிடமிருந்து வெளிவரவில்லை.
இங்கேதான் ஒரு சந்தேகம் வலுக்கிறது. மக்க|ள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ, அதை அவர்களுக்கு தாராளமாக அள்ளி வீசி வருகிறாரோ கமரன் என்று எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் வெற்றிக்காக மக்கள் விரும்புகிறவற்றை மட்டும் தெரிவு செய்து அதற்குக் கொஞ்சம் ஜோடனை செய்து, மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கிறார்களோ என்பதுவே சிலரது சந்தேகம்.
டோனி பிளேயர் பதவிக்கு வரும் போது கூட மக்களின் மனத்தில் இதே போல பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் யதார்த்த நிலைகளினால் அவையனைத்து, நிறைவேற்றப்பட்டனவா? என்பது சந்தேகமே!
எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருக்கும் போது வாக்குறுதிகளை அள்ளி வீசுவது மிகவும் சுலபம், ஆனால் அரசு என்னும் அரியணையில் அமர்ந்த பின்பு பல்வேறு அகப்புறச் சூழல்களினால் வாக்குறுதிகள் பல வாயுறுதிகளாகவே இருந்து விடுகின்றன.
இந்தக் கசப்பான் உண்மை, டேவிட் கமரனுக்கு பிரதமர் என்னும் பதவியிலமர்ந்த பின்புதான் வெளிக்குமோ என்னவோ? சிலவேளைகளில் இக்கருத்துக்கு முற்றும் முரணாக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் பிரதமராக கமரன் அமைந்து விடலாம், அப்படி அமைய வேண்டும் என்பதுவே எமது விருப்பமும் கூட.
சமீபத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தைக் கலக்கிய பாரளுமன்ற உறுப்பினர்களின் செலவு பற்றிய சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அந்த எதிரிடையான அபிப்பிராயங்கள் மக்கள் மனத்தில் அரசியல்வாதிகளைப் பற்றிச் சந்தேகம் கொள்ளவே வைத்துள்ளது.
எது எப்படி இருப்பினும், கருத்துக் கணிப்புகள், ஊடகக் கருத்துகள், மக்களின் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிதான் ஜெயிக்கும் போலத் தென்படுகிறது. ஆனால் அரசியலில் இரண்டு கிழமைகளே பெரிய காலமாக இருப்பதால் இப்போதைக்கும், அடுத்த தேர்தல் வரும் நேரத்துக்கு இடையில் எதுவும் நடக்கலாம்.
குட்டை ஒன்றுதான், மட்டைகள் தன் வெவ்வேறோ?
Oct 21, 2009
* Do not use semicolon(;)