மலாகா (ஸ்பெயின்) சுற்றுலா

(சுபாஷினியும் அவர் கணவர் பீட்டர் டிரெம்மலும் ஜெர்மனியில் வசிக்கின்றனர்; இவர்கள் இருவரும் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஸ்பெயின் நாட்டின் மலாகா பகுதிக்குச் சுற்றுலா சென்று வந்தனர். அந்தப் பயண அனுபவங்களைச் சென்னை ஆன்லைன் வாசகர்களுடன் சுபாஷினி பகிர்ந்துகொள்கிறார். இவர், தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களுள் ஒருவர். எளிய தமிழில், நிறைய படங்களுடன் இதோ இவரது பயணம் தொடங்கிவிட்டது. - ஆசிரியர்)

Malaga Travelog by Subashini Tremmel

ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகளில் ஒன்று; வரலாற்று நோக்கில் மிகப் பல சரித்திர நிகழ்வுகளைக் கண்ட நாடு. அதில் அண்டலூசிய எனும் பகுதி ஏறக்குறைய 17% ஸ்பெயினின் நிலப்பகுதியைக் குறிப்பது (தீவுகளைச் சேர்க்காமல்); அதில் மலாகா ஒரு துறைமுகப் பட்டினம்.

Malaga Travelog by Subashini Tremmel

எங்கள் பயணம் ஸ்டுட்கார்ட்டிலிருந்து மலாகா நோக்கி நேராக தெற்கு நோக்கிச் செல்லாமல் முதலில் ஹம்பெர்க் (ஜெர்மனி) சென்று பின்னர் அங்கிருந்து மலாகா (ஸ்பெயின்) செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டுட்கார்ட்டிலிருந்து ஹம்பெர்க்கிற்கு ஏறக்குறை 800 கிமீ தூரம். அதிலும் வடக்கு நோக்கிய பயணம். பயண நிறுவனத்தின் ஏற்பாடு, இது. ஹம்பெர்கிலிருந்து பின்னர் மலாகாவிற்குப் பயணம். ஒரு சில பயணிகளை மற்றும் ஏற்றிச் செல்வதற்குப் பதிலாக அருகிலுள்ள ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து மலாகா பயணிக்கும் பலர், ஹம்பெர்க்கிலிருந்து புறப்படும் வகையில் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை விமானத்தில் பயணித்த பல மொழி பேசும் பயணிகளைப் பார்த்த போது புரிந்தது. இதுவும் ஒரு வியாபார உத்தி தானே.

Malaga Travelog by Subashini Tremmel

ஏறக்குறைய 3 மணி நேர பயணம். மதியம் 2 மணிக்கு விமான நிலயத்தை அடைந்து பின்னர் அங்கேயே முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த வாடகைக் காரை எடுத்துக்கொண்டு நானும் என் கணவரும் எங்கள் தங்கும் விடுதி நோக்கிப் புறப்பட்டோம். இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அண்டலூசியா, விஸ்தாரமான மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்த பகுதி. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிக்க, பேருந்து ரயில் இவற்றிற்குப் பதிலாக ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்வது சிறப்பு. எங்கள் தங்கும் விடுதி இருக்கும் இடம் எஸ்டாபோனா. இது, மலாகாவிலிருந்து ஏறக்குறைய 80 கிமீ தூரம் உள்ள நகரம். இடையிலேயே புவன்ஜிரொலா, மார்பெயா போன்ற சற்றே பெரிய நகரங்களைக் கடந்து கடற்கரையோர நெடுஞ்சாலையில் மத்திய தரைக்கடலை ரசித்தவாறே பயணித்த போது காலையிலிருந்து பயணித்த அலுப்பு மறைந்துவிட்டது.

Malaga Travelog by Subashini Tremmel

எஸ்டபோனா, ஒரு சிறிய நகரம்; குறிப்பாக நாங்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி, கடற்கரையை ஒட்டிய வண்ணம் அமைந்த ஓர் இடம். காலைத் தழுவ வரும் அலைகளில் நடப்பது, அதிகாலை கடற்கரையில் ஜோகிங் ஓட்டம், மாலை நெடுந்தூரம் அலைகளில் நடந்து செல்வது என்று பொதுவாகவே எங்கள் 14 நாள் விடுமுறையின் ஒவ்வொரு நாளின் சில மணி நேரங்கள் கடற்கரை அலைகளோடு கழிந்தன.

Malaga Travelog by Subashini Tremmel

விடுமுறையில் புத்தகங்கள் வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இம்முறையை விடுமுறையில் வாசிக்க இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தேன். ஒன்று Sam Bourne எழுதிய The final reckoning மற்றொன்று Dan Brown-இன் புதிய நாவல் The lost Symbol. The final reckoning விமானத்திலேயே படிக்கத் தொடங்கிவிட்டேன். ஆரம்பமே மிக சுவாரசியமானது. நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வரும் ஒரு முதியவர், பாதுகாப்புப் படைகளால் தீவிரவாதி எனத் தவறாக நம்பப்பட்டு கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விஷயங்களை மிகச் சுவையாக விவரித்துச் செல்லும் நாவல், இது. இது, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட நாவல்.

2ஆம் உலகப் போருக்கு முன்னர் 1939, 1940களின் ஆரம்பத்தில் லித்துவானியா, போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் யூத மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆயிரக் கணக்கான யூத மக்கள் பல்வேறு தருணங்களில் ஆயிரம் ஆயிரமாகக் கொல்லப்பட்ட வரலாற்றுச் செய்தியை, படிப்படியாகப் பல குடியிருப்புகளில் (ghettoes) வைக்கப்பட்டிருந்த யூத மக்களைக் குழுக்களாகக் கொன்று குவித்த விதத்தை இந்த நூல் விவரிக்கின்றது. அக்காலக் கட்டத்தில் அக்குழுக்களில் இந்தக் கொடுமைகளை அனுபவித்த இளைஞர்கள் சிலர், Dam Israel Nokeam (DIN) என்ற ஒரு இரகசிய அமைப்பை உருவாக்கி அதன் வழியே செய்திகள் பரிமாறியது; 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் இக்குழுவினர் நாஸியின் பழைய உயர் அதிகாரிகளில் சிலரை மிகத் தந்திரமாகக் கொன்றது எனப் பல உண்மைத் தகவல்களைச் சில பெயர் மாற்றங்களோடு இந்த நூல் மிக மிகச் சிறப்பாக விளக்கிச் செல்கின்றது.

இந்த நாவலில் வரும் DIN இயக்கத் தலைவர் உண்மையான யூதக் குழுவினர் தலைவரான Abba Kovne-ஐ மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. யூத மக்களின் மனித உரிமைப் போராட்டம், நாடிழந்து மக்கள் பட்ட கஷ்டங்கள், பின்னர் படிப்படியாக இஸ்ரேல் என்ற தனி யூத நாட்டை உருவாக்க நடந்த சில முக்கியச் செய்திகளை மிகக் கொஞ்சம் கதைகளோடும் பல உண்மைச் சம்பவங்களோடும் சேர்த்து ஆசிரியர் எழுதியிருக்கின்றார். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான கெர்ஷோன் மாட்ஸ்கின் என்பது புனைபெயர் என்றாலும் இவரும் உண்மையான ஒரு முக்கிய நபரின் சித்திரிப்பே.

2ஆம் உலகப் போருக்குப் பின்னர் DIN அமைப்பு, ஜெர்மானிய நாஸி அதிகாரிகளில் தண்டனைகளிலிருந்து தப்பிய பலரை ஒழிக்க முயன்ற தந்திர முயற்சிகளில் திட்டமிடப்பட்ட 'plan A', 'plan B' எனக் குறிப்பிடப்படும் இரண்டும் மிக விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதில் plan B என்பது விஷத்தை உணவில் கலந்து, சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாஸி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதும் அதனால் 2300 ஜெர்மானிய நாஸிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவில் உள்ள உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் எத்தனை ஜெர்மானிய நாஸிகள் இறந்தனர் என்ற தகவலை அரசாங்கம் சரியாக வெளியிடவில்லை என்ற போதிலும் DIN செயல்படுத்திய இந்தத் தாக்குதல் ஓரளவுக்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும் 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் முழுக் கவனமும் தனி இஸ்ரேல் நாடு எனும் ஒருமித்த கருத்தை அடைப்படையாகக் கொண்டு இயங்கியதால் DIN தனது செயல்பாடுகளைப் படிப்படியாக முடக்கிக்கொண்டது. ஆனாலும் DIN வழி ஏறக்குறைய 50 இளைஞர்களும் இளைஞிகளும் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து இவ்வகைப் பழிதீர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்னும் சரித்திர உண்மையை இந்நாவலைப் படிப்பவர்களுக்கு நாவலாசிரியர் புரிய வைத்திருக்கின்றார். இவரது முந்தைய வெளியீடான The Last Testament கூட மிக அருமையான ஒரு நாவல்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சில ஆண்டுகள் சமாதான அமைப்புப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்ற இந்நாவலாசிரியர், தாம் சந்தித்த, கேட்ட, பார்த்த, அனுபவித்த உண்மைச் சம்பவங்களை நாவலில் திறம்பட சேர்த்து விவரித்து, படிப்பவர்களுக்கு நல்ல தகவல் விருந்து அளிக்கக்கூடியவர் என்பது இவரது இரண்டு நாவல்களை வாசித்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

3ஆம் நாள்: புவன்ஜிரோலா, மிஹாஸ்

சரி, நாவலிலிருந்து சுற்றுப் பயண விபரங்களுக்கு வருவோம். மூன்றாம் நாள் எங்கள் திட்டத்தில் புவன்ஜிரோலாவும் மிஹாசும் இருந்தன.

(பயணம் தொடரும்....

=================================

குறிப்பு: முதல் இரண்டு ஸ்பெயின் வரைபடங்களைத் தவிர ஏனைய படங்கள் உரிமை, சுபாஷினி & பீட்டர் ட்ரெம்மல்.

மலாகா (ஸ்பெயின்) சுற்றுலா - 2
Nov 03, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

KANYA KANYA : Persons working in a responsible position should avoid making assumptions r...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:36 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.