
நான் சிறு வயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு பாடத்தில் பருவங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதாகவும் அவை கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம், வசந்த காலம் எனப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. இத்தனை பருவங்களை நான் கண்டதில்லையாதலால் அது பற்றி அப்போதே யோசித்திருக்கிறேன். ஆனால் ஆசிரியரிடம் கேட்க வேண்டும் என்ற நினைப்பு ஏற்பட்டதில்லை. நம் பள்ளிகளில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே முறை. அதனாலும் கேட்க வேண்டும் என்று நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் பருவங்கள் பற்றிய குழப்பம் எனக்கு வெகு நாட்களாக இருந்தது. திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவிற்கு வந்த பிறகுதான் அந்தப் புதிர் விடுபட்டது.
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அதாவது குளிர் அதிகமாக உள்ள நாடுகளில் ஒரு வருடத்தில் பருவங்கள் நான்கு முறை மாறுபடும். கோடை காலம் என்பது ஜூன் இருபதிலிருந்து செப்டம்பர் இருபது வரை. இந்தப் பருவத்தில் நல்ல வெயில் அடிக்கும். சில சமயங்களில் சூரியன் மிகவும் உக்கிரமாக இருக்கும். இருந்தாலும் நம்மூர் வெயிலைப் போல் வாட்டாது. அப்படியும் அமெரிக்காவில் குளிர்சாதனம் உபயோகிக்காதவர்கள் அநேகமாக இல்லையென்றே சொல்லலாம். தனிப்பட்டோ ர் வீடுகள், அலுவலகங்கள், பொது இடங்கள் ஆகிய எல்லா இடங்களிலும் குளிர்சாதனக் கருவி இருபத்து நாலு மணி நேரமும் வேலைசெய்துகொண்டிருக்கும். (இப்படி எரிசக்தியை உபயோகித்து அமெரிக்கா பூமியின் வெப்பத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறது, இந்தியாவையும் சீனாவையையும் குற்றம் சாட்டிக்கொண்டு.)
கோடை காலம் முடியும் தறுவாயில் வெப்பம் கொஞ்சம் குறைந்து இதமாக இருக்கும். அடுத்ததாக வருவது இலையுதிர் காலம். எனக்கு மிகுந்த குழப்பத்தைக் கொடுத்த இந்தப் பருவம் செப்டம்பர் இருபதிலிருந்து டிசம்பர் இருபது வரை தொடரும். இந்தப் பருவத்தின் ஆரம்பத்தில் அதிக வெப்பமும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமாக இருக்கும். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைந்து குளிர் ஆரம்பிக்கும். குளிர் அதிகமாக அதிகமாக, மரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்க ஆரம்பிக்கும். ஆனால் அப்படி உதிர்வதற்கு முன்னால் ஒவ்வொரு வகையான மரங்களின் இலைகளும் ஒவ்வொரு வகையான வண்ணத்தைப் பெற்று இருக்கும் இடங்கள் எல்லாம் பூத்தோட்டங்கள் போல் காட்சியளிக்கும். பல வகையான மஞ்சள் வண்ணம், க்ரேன்பரி (cranberry - இது ஒரு வகையான பழம்) வண்ணம் என்று பல வண்ணங்களில் இலைகள் காட்சியளித்து, கண்ணிற்கு விருந்தளிக்கும்.
புறநகர்ப் பகுதிகளில் நிறைய மரங்கள் இருக்குமாதலால் வீட்டின் உள்ளே இருந்துகொண்டே இந்த மரங்களை ரசிக்கலாம். சாலைகளில் நடந்து சென்றாலோ, காரில் சென்றாலோ இந்த மரங்களை ரசிக்கலாம். காசு, பணம் எதுவும் செலவழிக்காமல் இருந்த இடத்திலிருந்தே அனுபவிக்கக் கூடிய இந்த அழகைப் பெற்ற அமெரிக்கர்கள் அதிர்ஷ்டசாலிகள். பக்கத்தில் சென்று இந்த இலைகளைத் தொட்டுப் பார்த்தால் பழுத்து உதிரப் போகும் இந்த இலைகளா இத்தனை அழகைக் கொடுக்கின்றன என்று அதிசயமாக இருக்கும். நான் ரசித்த இந்தக் காட்சிகளை மற்றவர்களும் ரசிக்க இந்தப் பத்தியில் படங்கள் உள்ளன.
அடுத்து வருவது குளிர்காலம். டிசம்பர் இருபதிலிருந்து மார்ச் இருபது வரை இது நீடிக்கும். இந்தப் பருவத்தில் மிகவும் அதிகமாகக் குளிரும். ஊரைப் பொறுத்து உஷ்ண நிலை பூஜ்யத்திற்குக் கீழேயும் போகலாம். உஷ்ண நிலை இவ்வளவு குறைவாக இருப்பதால் மேகங்கள் மழையாகப் பொழியும் போது மழைநீர் உறைந்து பனியாகப் பெய்யும். ஒரு சென்டிமீட்டர் மழை என்றால் அது பத்து சென்டிமீட்டர் பனியாக மாறும். முதல் பனியைப் பெரும்பாலோர் வரவேற்றாலும், போகப் போகப் பனி, பெரிய தலைவலியாக மாறிவிடும். பனி பெய்தவுடன் உடனடியாக அதை அப்புறப்படுத்த வேண்டும். பனி உறைந்து கட்டியாகிவிட்டால் அதன் மேல் நடப்பவர்கள் கீழே விழுவதற்கு ஏதுவாகும். மேலும் பனி சேரச் சேர அதைச் சாலைகளின் ஓரங்களில் சேர்த்து வைப்பார்கள். நாளடைவில் அது அதிக அழுக்கடைந்துவிடும். சில வருஷங்களில் தொடர்ந்து பனி பெய்வதாலும் உஷ்ணநிலை அதிகம் கூடாததாலும் பனி வெகுநாட்கள், ஏன் பல மாதங்கள் கூட, அப்படியே இருக்கும்.
இதை அடுத்து வருவது வசந்த காலம். வசந்த காலம் என்றாலே எல்லோர் மனத்திலும் ஒரு புதுப் பூரிப்பு ஏற்படும். குளிர்காலம் வந்துவிட்டால் வசந்த காலம் அதிக தூரத்தில் என்று ஒரு பழமொழியே இருக்கிறது. வசந்த காலம் மார்ச் இருபதிலிருந்து ஜூன் இருபது வரை. ஏப்ரல் மத்தியிலேயே இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்த மரங்களும் செடிகளும் மறுபடி துளிர்க்க ஆரம்பிக்கும். எங்கும் புதுப்பொலிவு காணப்படும். மொட்டையாக இருந்த மரங்களும் செடிகளும் புது இலைகளோடும் பூக்களோடும் காணப்படுவதைப் பார்ப்பது ஒரு தனி இன்பம். குளிர்காலம் முழுவதும் வீட்டிற்கு வெளியே அதிகமாகச் செல்லாத அமெரிக்கர்கள், வசந்த காலம் ஆரம்பித்ததும் அதிக நேரம், குறிப்பாக வார இறுதி நாட்களில், வெளியே இருக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் உடுத்தும் ஆடைகளும் குறைந்துகொண்டே வரும்.
இந்தியாவில் இப்படிப் பருவ காலங்கள் மாறாததால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தட்பவெட்பம் எப்படி என்று கேட்டால் எங்களுக்கு மூன்று காலங்கள், கோடை காலம், அதை விடக் கடுமையான கோடை காலம், அதை விடக் கடுமையான கோடை காலம் என்று வேடிக்கயாகக் கூறுவதுண்டு. தென் இந்தியாவில் கோடை காலம் தவிர மழை காலம் என்று வேண்டுமானால் சொல்லலாம். வட இந்தியாவில் குளிர் காலத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். பிரிட்டிஷ் காலத்தில் பாடப் புத்தகங்களில் எழுதப்பட்ட பருவ காலங்கள் சுதந்திரம் பெற்றபின்னும் ஏட்டுச் சுரைக்காயாக அப்படியே இருக்கின்றன.
அமெரிக்க இலையுதிர் காலப் படங்களைப் பார்க்க:
http://www.usna.usda.gov/PhotoGallery/FallFoliage/FallFoliage01.html
=========================================
படங்கள்: மெல்லியல்
Oct 30, 2009
* Do not use semicolon(;)