ஹைதராபாத், நவ.5 (டிஎன்எஸ்)
ஆந்திர இளம் குத்துச்சண்டை வீராங்கனை அமராவதி நேற்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனை எஸ்.அமராவதி (வயது 19). ஹைதராபாத் லால்பகதூர் ஸ்டேடியத்தில் உள்ள ஆந்திர விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி இருந்து பயிற்சி எடுத்து வந்தார். ஜாம்ஷெட்பூரில் நடக்க இருக்கும் தேசிய குத்துச்சண்டை போட்டிக்காக அவர் தன்னை தயார்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் அமராவதி நேற்று காலை விடுதி படுக்கை அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். அவருடன் தங்கி இருந்த மற்ற வீராங்கனைகள் கொடுத்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் வந்து பார்த்த போது அமராவதி இறந்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமராவதியின் பயிற்சியாளர் ஓம்கர் யாதவின் துன்புறுத்தலே அவரது சாவுக்கு காரணம் என்று அமராவதியின் சகோதரர் சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட ஆந்திர விளையாட்டு அமைச்சர் வெங்கட் ரெட்டி, 'அமராவதி மரணம் குறித்து ஆந்திர விளையாட்டு ஆணையம் விரிவான விசாரணை நடத்தும் என்றும் தவறு இழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது' என்றும் தெரிவித்தார்.
உயர்மட்ட விசாரணை நடைபெறும் என்று ஆந்திர விளையாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் ஏ.கே.பரிதா தெரிவித்துள்ளார்.
அமராவதி கடந்த தேசிய குத்துச்சண்டை போட்டியில் கால் இறுதியில் ரயில்வே வீராங்கனை சுனிதா யாதவிடம் தோல்வி கண்டார். முந்தைய சுற்றுகளில் அவர் டெல்லி மற்றும் மராட்டிய வீராங்கனைகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)