
கவுகாத்தி, நவ.7 (டிஎன்எஸ்)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 6ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தில் நவம்பர் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இப்போட்டியில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை 5 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஒரு கட்டத்தில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி தற்போது முன்னிலையில் உள்ளது. பரோடாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 ரன்னிலும், மொகாலியில் நடந்த 4ஆவது போட்டியில் 24 ரன்னிலும், ஹைதராபாத்தில் நடந்த 5ஆவது ஆட்டத்தில் 3 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணி நாக்பூரில் நடந்த 2ஆவது போட்டியில் 99 ரன்னிலும் டெல்லியில் நடந்த 3ஆவது ஆட்டத்தில் 6 விக்கெட்டிலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 6ஆவது ஒருநாள் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நாளை (நவம்பர் 8) நடக்கிறது.
நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த இந்தியா நாளை பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த போட்டித் தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக வெற்றி பெற்றுள்ளது. 2ஆவது பேட்டிங் செய்த அணி ஒரு முறைதான் வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் “டாஸ்” வெல்லும் அணி அதிக ரன் குவிக்கும் முனைப்பில் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும்.
பேட்டிங்கை ஒப்பீடுகையில் பந்து வீச்சு பலவீனமாகத்தான் இருக்கிறது. பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் நமது பந்து வீச்சாளர்கள் மிகவும் திணறி விடுகிறார்கள். கடந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை முனாப் பட்டேல் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர் நாளை நீக்கப்பட்டு மீண்டும் இஷாந்த் சர்மா சேர்க்கப்படுவார்.
பேட்டிங்கில் டெண்டுல்கர், கேப்டன் டோனி, ஷேவாக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணி 2 ஆட்டத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவியது. வெற்றியின் விளிம்பு வரை வந்து தோற்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமபலத்துடன் உள்ளது. அந்த அணியின் கூடுதல் பலமே பீல்டிங்தான். நாளைய போட்டியில் தொடரை இழக்காமல் இருக்கும் வகையில் இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 8ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டி பகல் ஆட்டமாக நடக்கிறது. காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தூர்தர்சன், நியோ கிரிக்கெட் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)