
காபூல், நவ.2 (டிஎன்எஸ்)
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சுயேச்சை வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்றது. 36 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அதிபர் கர்சாய் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதில் சுமார் 30.5 சதவீத வாக்குகளுடன் அப்துல்லா அப்துல்லா 2ஆம் இடத்தைப் பிடித்தார்.
வெற்றி பெறும் நிலையில் இருந்த அதிபர் ஹமீத் கர்சாய் பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியை செல்லாதது என ஐ.நா. அறிவித்ததால், முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்கு இடையே மட்டும் மீண்டும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
ஹமீத் கர்சாய் நியமித்த தேர்தல் ஆணையத்தை மாற்ற வேண்டும் என அப்துல்லா கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தனது ஆதரவாளர்களிடையே அப்துல்லா அப்துல்லா நேற்று பேசியதாவது:
நமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, வெளிப்படையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
நியாயமான தேர்தல் என்பது ஆப்கன் மக்களின் உரிமை. ஆனால், நடந்து முடிந்த தேர்தல் அந்த வகையில் தோல்வியாகும் என்றார்.
எனினும், நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தான் கூறவில்லை என்றும் அப்துல்லா தெரிவித்தார்.
"அப்துல்லா விலகியது துரதிருஷ்டவசமானது. எனினும், அவர் இல்லாவிட்டாலும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற வேண்டும். வாக்களிப்பதற்கு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்' என அதிபர் ஹமீத் கர்சாய் செய்தித் தொடர்பாளர் வஹீத் ஓமர் தெரிவித்தார்.
(டிஎன்எஸ்)
Nov 02, 2009
* Do not use semicolon(;)