
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தமிழக அரசுக்கு 25 சதவீத ஆதாயப் பங்குத் தொகையாக 14 கோடியே 48 லட்சம் ரூபாயை முதலமைச்சர் கருணாநிதியிடம் சிப்காட் நிறுவனம் சார்பில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தொழில் வளாகங்கள், தொழிற்பூங்காக்கள், தொழில் மையங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வரும் சிப்காட் நிறுவனம் 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இலாபம் ஈட்டி தமிழக அரசுக்கு ஆதாயப் பங்குத் தொகை வழங்கி வருகிறது.
2006-07ஆம் ஆண்டில் சிப்காட் நிறுவனம் 329 கோடியே 90 லட்சம் ரூபாய் வருமானமும், 56 கோடியே 69 லட்சம் ரூபாய் நிகர இலாபமும் ஈட்டி 20 சதவீத ஆதாயப் பங்குத் தொகையாக 11 கோடியே 58 லட்சம் ரூபாயைத் தமிழக அரசுக்கு வழங்கியது.
அதேபோல சிப்காட் நிறுவனத்தின் மிகவும் உயர்ந்த வருமானமாக 2007- 08ஆம் ஆண்டில் 364 கோடியே 93 லட்சம் ரூபாய் வருமானமும், 96 கோடியே 66 லட்சம் ரூபாய் நிகர இலாபமும் ஈட்டி 25 சதவீத ஆதாயப் பங்குத் தொகையாக 14 கோடியே 48 லட்சம் ரூபாயைத் தமிழக அரசுக்கு வழங்கியது.
இவற்றைத் தொடர்ந்து உலகளாவிய பொருளாதாரத் தேக்கநிலை இருந்த போதிலும் 2008-2009ஆம் ஆண்டில் தமிழக அரசின் நல்லிணக்கத் தொழில் கொள்கைகள் காரணமாக சிப்காட் நிறுவனம் 351 கோடியே 86 லட்சம் ரூபாய் மொத்த வருமானமும், 90 கோடியே 38 லட்சம் ரூபாய் நிகர லாபமும், ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் பயனாகத் தமிழக அரசுக்கு 25 சதவீத ஆதாயப் பங்குத் தொகையான 14 கோடியே 48 லட்சம் ரூபாயை முதலமைச்சர் கருணாநிதியிடம் சிப்காட் நிறுவனம் சார்பில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மை செயலாளர் கு.ஞானதேசிகன், தொழில் துறை முதன்மை செயலாளர் எம்.எப்.பாரூக்கி, சிப்காட் நிறுவனத் தலைவர், மேலாண்மை இயக்குனர் என்.கோவிந்தன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)