சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
செங்குன்றத்தில் 15 செ.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும் பெய்திருப்பதால் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பூண்டியில் 7 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
இந்த மழை காரணமாக பூண்டி ஏரியில் நீர்மட்டம் 132.50 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் உயர்மட்ட நீர்அளவு 140 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அந்த ஏரியில் 1,229 மில்லியன் கனஅடி தண்ணீர் நிறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சோழவரத்தில் 53.30 அடியும், செங்குன்றத்தில் 38.41 அடியும் தண்ணீர் மட்டம் இருந்தது. இந்த ஏரிகளில் மொத்த நீர்மட்டம் முறையே 64.50 அடி, 50.20 அடியாகும்.
செம்பரம்பாக்கம் ஏரி வெகு வேகமாக நிரம்பி வருகிறது. அந்த ஏரியின் 85.40 அடி என்ற கொள்ளளவில், 73.40 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தற்போது தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருமானால் இந்த ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)