சேலம், நவ.5 (டிஎன்எஸ்)
மாணவர்கள் கோஷ்டி மோதல் எதிரொலியாக, சேலம் சட்டக்கல்லூரி காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது. கல்லூரி திறப்பு குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சேலம் கோரிமேட்டில் தனியார் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் விக்னேஸ்வரராஜ், சதீஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோரிமேட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை பிரபாகரன் தரப்பு மாணவர்கள் வழிமறித்து தாக்கினார்கள். இதில் விக்னேஸ்வரராஜ் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. பதிலுக்கு சதீஷ் தரப்பினரும் தாக்குதல் நடத்தினர்.
இதில் எதிர்தரப்பை சேர்ந்த பிரபாகரனும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. அவரை விக்னேஸ்வரராஜ் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
கல்லூரியில் ராகிங் பிரச்சினை இருந்து வந்ததாகவும், மூத்த மாணவர்கள் சிலர் புதிதாக சேருபவர்களை மது வாங்கி வா என கூறி மிரட்டி வந்ததால் இந்த கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சதீஷ்குமார், வெங்கடேஷ், மாரிசெல்வம், ராஜகுரு, பிரபாகரன், பாலசந்தர், சுரேஷ் மற்றும் ராம்கி, திருமுருகன், சதீஷ், விக்னேஸ்வரராஜ் ஆகிய 11 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலை கண்டித்து வகுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 3 மாணவர்களை தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த வகுப்பு புறக்கணிப்பு நடந்தது.
இந்த நிலையில் நேற்று சட்டக்கல்லூரி நுழைவு வாயில் கேட்டில், சேர்மன் தனபாலன், செயலாளர் சரவணன் ஆகியோர் கையெழுத்திட்ட நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் கல்லூரி காலவரையற்று மூடப்படுகிறது என்றும், கல்லூரி திறப்பு குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி முன்பு காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)