
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் குடும்ப வருமான வரம்பை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலை வாய்ப்பற்ற, படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 2006ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் 150 ரூபாய் வீதமும், 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் 200 ரூபாய் வீதமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் 300 ரூபாய் வீதமும் இந்த அரசினால் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, படித்த வேலைவாய்ப்பற்ற 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 இளைஞர்களுக்கு 156 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ், மேலும் பல இளைஞர்கள் பயன்பெறவேண்டும் என்னும் நோக்கத்துடன், இந்த திட்டத்தின் சலுகையை ஒரு பயனாளி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள அவரது குடும்ப ஆண்டு வருமானத்தை, ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் என்று இருப்பதை 50 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி நவம்பர் 4ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)