
மும்பை, நவ.7 (டிஎன்எஸ்)
மகாராஷ்டிர முதலமைச்சர் அசோக் சவான், நேற்று ஆளுநரை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து மும்பையில் நவம்பர் 7ஆம் தேதி மாலையில் நடைபெறும் விழாவில் புதிய அரசு பதவி ஏற்கிறது.
12ஆவது மகாராஷ்டிர சட்டசபையை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 144 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து 3அவது முறையாக ஆட்சியை பிடித்தது.
எனினும் அமைச்சர்கள் எண்ணிக்கை, இலாகா பகிர்வு ஆகியவற்றில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே இழுபறி ஏற்பட்டது.
இதற்கிடையே 11ஆவது மகாராஷ்டிர சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 3ஆம் தேதியுடன் முடிந்ததால், பிரச்சினையில் மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர் தலையிட்டார். அவர் அசோக் சவானையும், சகன் புஜ்பாலையும் அழைத்து பேசினார். அப்போது மக்களின் தீர்ப்பை மதித்து புதிய அரசை உடனே அமைக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆளுநரின் அறிவுரையை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டின. இதன் பயனாக நேற்று முன்தினம் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது. அதன்படி காங்கிரசுக்கு முதலமைச்சர் உள்பட 23 அமைச்சர் பதவிகளும், தேசியவாத காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் உள்பட 20 அமைச்சர் பதவிகளும் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டது. சபாநாயகர் பதவி பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசோக் சவானும், துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சகன் புஜ்பாலும் நேற்று மும்பையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் எஸ்.சி.ஜமீரை சந்தித்தனர்.
தனக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறிய அசோக் சவான், அதற்கான கடிதத்தையும், பட்டியலையும் ஆளுநரிடம் கொடுத்தார்.
இந்த நிலையில் புதிய அரசு அமைக்க வருமாறு அசோக் சவானுக்கு ஆளுநர் எஸ்.சி.ஜமீர் நேற்று இரவில் அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து புதிய அரசு இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறது. மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அசோக் சவானுக்கும், அவரது அமைச்சர்களுக்ம் ஆளுநர் எஸ்.சி.ஜமீர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
பதவி ஏற்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆளுநர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளன.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)