
சென்னை, நவ.3 (டிஎன்எஸ்)
சென்னை மெரீனாவில் கிரிக்கெட் விளையாட மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியம் கூறினார்.
திருவல்லிக்கேணி மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 91ஆவது வார்டு பொதுமக்களுக்கு வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு கோடியே 4 லட்சத்து 42 ஆயிரத்து 500 நபர்களுக்கு வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க திட்டமிட்டு, இதுவரை 85 இலட்சம் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 19 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மெரீனா கடற்கரை மணற்பரப்பு உலகிலேயே 2ஆவது அதிக மணற்பரப்பை கொண்ட கடற்கரையாகும். கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகம் எதிரில் பூங்கா, மெரீனா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை ஆகியவை ரூபாய் 40 கோடி செலவில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
மெரீனா கடற்கரையில் பொதுமக்கள் அமர்வதற்காக 14 இடங்களில் கிரானைட் கற்கள் கொண்டு அமர்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய புல்தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அழகிய நடை பாதைகள் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரை சுமார் ரூபாய் 17.17 கோடியில் அழகுபடுத்தும் பணி நடைபெறுகிறது. மேலும் ரூ.3.89 கோடியில் 447 அழகிய அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.
மெரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில் 100 முதல் 200 இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். கிரிக்கெட் விளையாடுவதற்காக மாநகராட்சி மூலம் ஏராளமான விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. கிரிக்கெட் விளையாடும் போது மின் விளக்குகள், புல் தரைகள் சேதமடைகின்றன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.
இளைஞர்கள் வேண்டும் என்றே சேதப்படுத்துவதில்லை. ஆனால் விளையாடும் போது சேதப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கோடி கணக்கில் செலவிட்டு அழகுபடுத்தப்பட்டுள்ள மெரீனாவை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை ஆகும். இளைஞர்கள் விளையாடுவதால் கடற்கரை அழகு பாழ்படுத்தப்படுவது ஏற்புடையது அல்ல.
இளைஞர்களின் பிரச்சனையை அறிந்த முதலமைச்சர் கருணாநிதி இதற்கு உடனடியாக தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளார். தலைமை செயலர் தலைமையில் இன்று மாலையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இளைஞர்கள் விளையாட மாற்று ஏற்பாடு பற்றி இந்த கூட்டத்தில் பரிசீலித்து முடிவு செய்வார்கள்.
இவ்வாறு மேயர் சுப்பிரமணியன் கூறினார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)