
சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களைக் கூட விற்க முடியாத அளவுக்கு தடைக்கற்களை ஏற்படுத்தி இருப்பதைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் கூடலூரில் நவடம்பர் 9ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், உதக மண்டலம் ஆகிய வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களிலும், அரசு குத்தகை நிலங்களிலும், கூடலூர் ஜென்மம் ஒழிப்புச் சட்டம் பிரிவு 17 நிலங்களிலும் காலம் காலமாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 2,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை வன உயிரின சரணாலயம், முதுமலை வன உயிரின சரணாலயம் ஆகிய பகுதிகளை புதிய புலிகள் காப்பகமாக அறிவிக்கை செய்து ஆணை வெளியிட்டது.
இதனையடுத்து, இப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தப் பகுதியில் இருப்பவர்கள் தங்களுடைய நிலங்களை விற்க வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட 15 உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த உயர்மட்டக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான், நிலச் சொந்தக்காரர்கள் நிலத்தை விற்பனைப் பதிவு செய்ய முடியும். இதன்படி, தங்களுடைய சொந்த நிலங்களை விற்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கே அவர்கள் பல ஆண்டு காலம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற அறிவிப்பு தனி மனித உரிமையை பறிப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இது மட்டும் அல்லாமல், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மூன்று அரசுப் பேருந்துகளைத் தவிர, அனைத்துப் போக்குவரத்து வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தங்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயத்தில், 900 கோடி ரூபாய் மதிப்பில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் இங்கு அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்த ஆய்வுக் கூடம் இங்கு அமைக்கப்பட்டால் இங்குள்ள புலிகள் காப்பகம் சுற்றுச் சூழலால் கடுமையாக பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
எது எப்படியோ, கூடலூர், பந்தலூர், உதகமண்டலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுடைய சொந்த நிலங்களைக் கூட விற்க முடியாத அளவுக்கு தடைக்கற்களை ஏற்படுத்தி இருக்கிற, வாகனப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தி ருக்கிற தி.மு.க. அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, கூடலூர், பந்தலூர், உதகமண்டலம் ஆகிய வருவாய் வட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களை எந்த விதக் கட்டுப்பாடுமின்றி உடனடியாக விற்க தி.மு.க. அரசு வழிவகை செய்ய வேண்டுமென்றும், போக்குவரத்து வசதிகளில் கட்டுப்பாடு ஏற்படுத்தி இருப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், 9ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செம்மலை, எம்.பி., தலைமையிலும், நீலகிரி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மில்லர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)