
வாஷிங்டன், நவ.3 (டிஎன்எஸ்)
ஐ.எம்.எப் என்று அழைக்கப்படும் சர்வதேச நிதியம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் 200 டன் தங்கம் விற்பனை செய்துள்ளது. இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 33 ஆயிரம் கோடி.
சர்வதேச நாடுகளுக்கு நிதி உதவிகள் வழங்கி வரும் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) தலைமையகம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ளது. பன்னாட்டு நிதியத்திடம் 3 ஆயிரத்து 217 டன் தங்கம் இருப்பு உள்ளது.
ஐ.எம்.எப் அதன் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்த செம்டம்பர் மாதம், அதனிடம் இருப்பில் உள்ள தங்கத்தில் 403 டன் விற்பனை செய்வது என்று அதன் நிர்வாக குழு முடிவெடுத்து அறிவித்தது. இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு ரிசர்வ் வங்கிகளும் தங்கத்தை வாங்க ஆர்வம் காண்பித்தன.
இதன் அடிப்படையில் முதலாவதாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு 200 டன் தங்கம் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடந்ததாக தெரிவித்துள்ளது. இதன் விலை தினமும். அதற்கு முந்தைய நாளில் இருந்த சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
இது குறித்து ஐ.எம்.எப் மேலாண்மை இயக்குநர் ஸ்டாருஸ்-கான் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கியுடன் நடந்த விற்பனையை வரவேற்கின்றேன் என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியா ரிசர்வ் வங்கியிடம் உள்ள அந்நிய செலவாணி கையிருப்பில் பெரும்பகுதி மற்ற நாட்டு கடன் பத்திரங்களாகவே உள்ளன. குறிப்பாக அமெரிக்க கடன் பத்திரமே உள்ளது. இதனால் தங்கத்தின் கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி. ஐ.எம்.எப் இடம் இருந்து தங்கம் வாங்கியுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)