சொல்லாமலே.......

 சொல்லாமலே.......

நாகை வை. ராமஸ்வாமி

அரை தூக்கத்தில் இருந்த ரோசலின் சுந்தருக்குப் பகலாக இருந்தாலும், கண்ணயரும் நேரம் அது. அவள் ரோமன் கத்தோலிக்; அவன் ஐயர்.  ஆமாம். அவர்கள் காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள். உணவு முதல் எல்லாவற்றிலும் வேறுபாடு இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துப் போகும் மனமொத்த தம்பதி. அவ்வப்போது எங்கும் இருப்பது போல் சிறு சிறு ஊசிப் பட்டாசுகள் தவிர மற்றபடி அவர்கள் வாழ்க்கை வண்ணத்துப் பூச்சிகள் விளையாடும் வாசமிகு பூந்தோட்டம் தான்.

இரவு நேரப் பணி முடித்து விட்டு காலையில் திரும்ப வந்து, சுந்தருக்கு வேண்டியதைச் செய்துவிட்டு, கண்ணயர மதியம் ஆகிவிடும். சுந்தர் திரும்பும் நேரம் கணக்கே கிடையாது. நள்ளிரவு கூட ஆகி விடும்.. தன்னையும் 'வெஜிடெரியன்' ஆக்கிக்கொண்டு சுந்தருக்குப் பிடித்த ஐயராத்து சமையல் செய்யக் கற்றுக்கொண்டு விட்டாள். இருந்தாலும் வேலைக்கும் போய்க்கொண்டு, பூஜை முதலியவை செய்து, வீட்டையும் பராமரிக்க முயன்று முயன்று அயர்ந்த நிலையில் ஒரு விளம்பரம் கொடுத்தாள்.

"காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சமையல், பூஜை, டிபன், இரவு உணவு தயாரித்து வீட்டையும் கவனித்துக்கொள்ள ஒரு சுமங்கலி மாமி தேவை."

அழைப்பு மணிச் சத்தம் கேட்டு கதவைத் திறக்கிறாள் ரோசலின்.

பளீரென்ற முகத்தில் லட்சணமாக, ஆனால் சின்னதாக ஒரு கருப்பு ஸ்டிக்கர் பொட்டுடன் மரியாதை கொடுக்கக் கூடிய நடு வயது தாண்டிய ஒரு மாமி நின்றிருந்தாள்.

"உள்ளே வரலாமா"

"வாங்க மாமி"

"என் பெயர் பங்கஜம். உங்க விளம்பரம் பார்த்து வந்தேன்"

"ஓ.கே.. உட்காருங்க. காபி, இல்லை, வேற ஏதாவது தரவா?"

"அடடா, அதேல்லாம் ஒண்ணும் வேண்டாம். உங்களுக்கு எதுக்கு சிரமம். இப்பதான் வரும் போது ஆத்துல மோர் குடிச்சுட்டு வந்தேன்."

"சரி, நான் கிருஸ்துவ மதம். என் வீட்டுக்காரர் ஐயர். பரவாயில்லையா?"

"அதெல்லாம் இந்தக் காலத்துல சகஜமாயிண்டு இருக்கும்மா...... என்னென்ன வேலை, எவ்வளவு கொடுப்பேள்? உங்க பேர்........"

"என் பேர் ரோசலின். நான் உங்க டாட்டர் மாதிரி. நீ என்றே சொல்லுங்க. ஐயர் வீட்டுச் சமையல். பூஜை ரூமில் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, ஒரு சின்ன பூஜை செய்யணும். காலை சமையல், ஒரு டிபன், இரவுக்கும் ஏதாவது செய்ய வேண்டும். காலை 11 மணிக்கு வந்துவிட்டு, 5 மணிக்குப் போய்விடலாம். சரியாக வருமா?"

"ரொம்ப சந்தோஷமாயிருக்கு ரோசலின். இந்தக் காலத்தில, ஆத்துக்காரர் ஜாதிக்கு இப்படி மரியாதை கொடுக்கிறயே. எனக்குச் சிரமம் இல்லை.  நான் வேலையை ஒத்துக்கிறேன்."

"எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு மாமி. சனி ஞாயிறு வரவேண்டாம். நீங்க எங்கே இருக்கீங்க? உங்களைப் பற்றி சொல்லுங்க."

"இங்க பாரு ரோசலின், நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்திருக்கிறேன். எங்க ஆத்துக்காரர்?..... ஆமாம், வெளியூரில் இருக்கார். எனக்கு ஒரு பொண்ணு.  என்ஜினீயரிங் படிக்கிறாள்."

"எப்படி சமாளிக்கிறீங்க? வீட்டுக்காரர் எந்த ஊரில் இருக்கிறார்?"

"ஆத்துக்காரர் மாசம் 5000 ரூபா அனுப்புகிறார். சிங்கப்பூரில் ஒரு பெரிய ஹோட்டலில் சூபர்வைசரா இருக்கிறார். இருந்தாலும், காலேஜ் ஃபீஸ், வீட்டு வாடகை எல்லாம் பிச்சிண்டு போறது. உனக்குத் தெரியாதா என்ன? அதான் ஏதாவது வேலைக்குப் போகலாமேன்னு தோனித்தும்மா."

மாமியை ரொம்ப பிடித்துப் போய்விட்டது ரோசலினுக்கு. விடக்கூடாது என்ற நோக்கத்தில், மாதம் ரூபாய் 4000 முதல் வருடமும், 5000 அடுத்த வருடமும் தருவதாகச் சொன்னாள்.

மாமிக்கு நெருக்கடி. 3000 தான் எதிர்பார்த்தாள். 4000 என்று சொன்னவுடன் மிக சந்தோஷப்பட்டாள். சரியெனச் சொன்னாள்.

ஆச்சு, மாமி வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதம் ஆகிவிட்டது. வேலையும் நன்றாகவே செய்கிறாள். ருசியான சாப்பாடு, சுந்தருக்கும் பிடித்துப் போய்விட்டது. மாமிக்கு இன்கிரிமென்ட், இப்பொழுது 4500 கொடுக்கிறார்கள்.

எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாள், மாமியின் முகம் வாடியிருப்பதைக் கண்டாள், ரோசலின்.

"என்ன மாமி, உடம்பு சரியில்லையா? ஏதாவது பிரச்சினையா? என்னவோ போல் இருக்கிங்க..?"

"ஒண்ணுமில்ல ரோசலின்." மாமி  சற்று தயங்கினாள்.

"இல்லை மாமி, என்னன்னு சொல்லுங்க, முடிந்தால், ஹெல்ப் பண்ணறேன்."

"இல்ல ரோசலின், எனக்கு என் பொண்ணு வசுமதி பற்றிய கவலை தான். இப்பல்லாம் அவள் காலேஜிலிருந்து ரொம்ப லேட்டாக வராள். கேட்டா சரியா பதில் சொல்ல மாட்டேங்கறா. யாரும் துணையில்லை, ரொம்ப பயமாயிருக்கு.." என்று அழ ஆரம்பித்துவிட்டாள் மாமி.

அதற்கு ரோசலின், "கவலைப்படாதீங்க மாமி, ஒரு பிரச்சினையும் இருக்காது. இந்தக் காலத்துப் பெண்கள் ரொம்ப புத்திசாலிங்க, தைரியசாலி  கூட. இருந்தாலும், ஒரு சனி, ஞாயிறு சுந்தர் இருக்கும்போது, வீட்டிற்கு அழைச்சிட்டு வாங்க. பேசி என்ன பிரச்சினை என்று விசாரிக்கலாம்" என்றாள்.

மாமி, "அச்சச்சோ, அதெல்லாம் வேண்டாம் ரோசலின், நான் பாத்துக்கறேன். உங்க ஆத்துக்காரருக்கு தொந்தரவு வேண்டாம்" என்றாள்.

பேசிக்கொண்டே இருக்கும்பொழுது, திடீரென்று, ரோசலின் முகம் மாறி, மயங்கி விழுகிற மாதிரி ஆகிவிட்டாள். மாமி உடனே தாங்கிப் பிடித்து, படுக்கையில் படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

கண் விழித்ததும், "என்ன ரோசலின், என்ன பண்ணறது? சரியாகத் தூங்கினாயா? சாப்பிட்டாயா? ஏதாவது, ஹார்லிக்ஸ், ஜுஸ் தரவா?" என்று கேட்டுக்கொண்டே, அவள் கையைப் பிடித்துப் பார்த்த மாமிக்கு சந்தோஷம், கண்ணீர் துளித்தது.

"நல்ல சேதி போல் தெரிகிறது. எத்தனை நாளாகிறது?" என்று மாமி கேட்டாள்.

"தெரியல மாமி, பீரியட் மிஸ் பண்ணி, இரண்டு வாரம் ஆகிறது.

"நன்னாயிருக்கு போ, உடனே டாக்டரிடம் காண்பித்து, நிச்சயம் பண்ணவேண்டாமோ?"

"சரி மாமி, இந்தச் சனிக்கிழமை சுந்தரை அழைச்சிக்கிட்டு போய்விட்டு வரேன்."

"அதான் சரி. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பேசாம, லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு, மாமி அவள் வாயில் சிறிது சர்க்கரை போட்டாள், தானும் போட்டுக்கொண்டாள்.

சனிக்கிழமை மாமிக்கு லீவு. ரோசலினுக்கு கொடுப்பதற்காக கேரட் அல்வா செய்து முடித்தாள். வாசல் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்த மாமிக்கு அதிர்ச்சி, ஆனந்தம், பயம் எல்லா உணர்ச்சிகளும் முட்டி மோதின. அங்கே, ரோசலினும் அவள் கணவன் சுந்தரும் நின்றிருந்தார்கள்.

"வா, ரோசலின்... வாங்கோ சார்" என்று இருவரையும் வரவேற்றாள்.

"மாமி, குட் நியூஸ். டாக்டரிடம் போயிட்டு தான் வரோம். கன்ஃபர்ம் ஆயிடுச்சி. 15 நாள் லீவு போட்டு வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க... நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்" என்று ரோசலின் சொன்னவுடன், சுந்தரும் ரோசலினும் நமஸ்கரித்தனர்.

சுந்தர், "அம்மா, என்னை மன்னிச்சுடம்மா" என்றவாறே மாமியை அணைத்துத் தேம்பித் தேம்பி அழுதான்.

பதறிய மாமியைப் பார்த்த ரோசலின், "கவலைப்படாதீங்க மாமி, எனக்கு எல்லாம் தெரியும். முதன் முதலில் உங்களைப் பார்த்ததும், நீங்கள் தான் சுந்தரின் அம்மா என்பதும், சுந்தருக்கு அப்பா இல்லை என்பதும், உங்கள் பெயர் பங்கஜம் இல்லை, ருக்மணி என்பதும்" என்றாள்.

"நீங்கள், சுந்தர், வசுமதி மூவரும் எடுத்துக்கொண்ட போட்டோவைப் பார்த்திருக்கிறேன், சுந்தர் காண்பித்திருக்கிறார்" என்றும் சொன்னாள்.

சுந்தர், "அம்மா, நான் வேலைக்காகச் சென்னை வந்தபிறகு ரோசலினைக் கல்யாணம் செய்துகொண்டது, உனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. பேச்சு வார்த்தை, கடிதப் போக்குவரத்து கூட இல்லை. நீ எங்கே இருக்கிறாய் என்பது கூட நான்கு வருஷமாகத் தெரியாமல் போய்விட்டது. நான் உன்னை ரொம்ப வேதனைப்பட வைத்துவிட்டேன். என்னை மன்னிச்சுக்கோம்மா" என்று விசும்பினான்.

பிள்ளையைப் பார்த்த சந்தோஷத்தில் மாமிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "சுந்தர், நீ கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்ததில் எனக்கு கோபம் கிடையாது. ஆனால், நான் இருக்கும்பொழுதே, என்னிடம் சொல்லாமல் கல்யாணம் செய்ததில் தான் எனக்கு மன வருத்தம்" என்றாள்.

ரோசலினிடம், "குழந்தே, நான் எங்க ஜாதியிலே பார்த்தாக்கூட உன்னை மாதிரி நல்ல பெண் சுந்தருக்குக் கிடைச்சிருப்பாளோன்னு சந்தேகம் தான். உங்க இரண்டு பேருடைய போட்டோவைப் பார்த்த உடனே எனக்குப் புரிஞ்சு போச்சு, நான் என் பிள்ளையாத்துக்கே வேலை கேட்டு வந்திருக்கேன்னு, அதான் சட்டுனு பேரை மாத்திச் சொல்லிட்டேன்" என்றாள் மாமி.

"அது சரி, ஏன் பொட்டு வைத்துக்கொண்டு, சுந்தர் அப்பா வெளியூரில் இருப்பதாகச் சொன்னீர்கள்?" என்று கேட்ட ரோசலினிடம், மாமி, "நீ தான் சுமங்கலி மாமி வேணும்னு விளம்பரம் கொடுத்திருந்தே. சரி, குங்குமம் இல்லாம வெறும் ஸ்டிக்கர் பொட்டு பரவாயில்லைன்னு, கறுப்பா சின்னதா வைத்திருந்தேன். வேலை வேணுமின்னு, தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சுக்கோம்மா" என்று வருத்தப்பட்டாள்.

சுந்தர், பதறினான். "அம்மா, நாங்கள் தான் தப்பு செஞ்சுட்டோம்மா. அம்மான்னு தெரிஞ்சும், உன்னை வேலைக்கு வைத்துக்கொண்டோம். ரோசலின் என் ஆபீசில் தான் வேலை செய்கிறாள். மிஷனில் வளர்ந்த அநாதைப் பெண். அவளுக்கு இந்து மதத்திலும் மரியாதையும் ஈடுபாடும் உண்டு.  வெஜிடேரியுன் வேற. அதான் நீ ஏதாவது சொல்லப் போகிறாயோங்கிற பயத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுண்டேன்.. நீதான் அம்மா எங்கள் இருவரையும் மன்னிக்கணும்" என்றான்.

"நான் தான் வேலைக்கு வரேன்னு தெரிஞ்ச பின்னே ஏன் எங்கிட்ட அப்போவே சொல்லலை?" என்று கேட்டாள் மாமி.

"அம்மாவையே பிள்ளையையும் மருமகளையும் பார்த்துக்க ஆண்டவனே அனுப்பியிருக்கிறார்னு சந்தோஷப்பட்டாலும், மனசு கஷ்டப்பட்டது அம்மா.  எங்களுக்குத் தெரியும்னு உனக்கு தெரிஞ்சால், பணம் வாங்கிக்க மாட்டியேன்னு பயம் வேறு, அதனால் தான்" என்று சொன்னவன், "ஆமாம், நீயும், தெரிந்தும் தெரியாத மாதிரி இருந்துவிட்டாயே, ஏன்?" என்று திருப்பிக் கேட்டான்.

"இதோ பாருடா கண்ணா, எல்லாம் நன்மைக்கே. நடந்ததெல்லாம் நான் கும்பிடற அந்த ஸ்ரீ சத்ய சாய் பாபா அனுக்கிரஹம் தான். ரோசலின் தான் என் நாட்டுப் பொண்ணுன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இனிமே கவலைப்படாதே நான் பாத்துக்கறேன். எல்லாரும் கேரட் அல்வா சாப்பிடுங்கோ, நான் பாட்டி ஆகப் போறேன் இல்லையா?" என்றாள் பெருமிதத்துடன்.

ரோசலின், சுந்தர் இருவரும், "அம்மா, நீங்கள் கஷ்டப்பட்டது போதும், நாங்கள் தீர்மானித்துவிட்டோம். வசுமதியை அழைத்துக்கொண்டு வீடு காலி செய்துவிட்டு அங்கேயே வந்துவிடு, சேர்ந்து இருக்கலாம்." என்றார்கள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த வசுமதி, ஆச்சரியமும் அழுகையுமாக, "அண்ணா, நீங்களா, இத்தனை நாள் எங்கே போயிட்டேள்? அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. என்னப் பத்தின பயம் வேற" என்றாள். வசுமதியிடம் மாமி இது நாள் வரை எதுவும் சொல்லவில்லை.

"கரும்பு திங்க கூலியா? என் பிள்ளை, மருமகளுடன் இருக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கேன்" என்று சொல்லி, பாபா படத்தைப் பார்த்து,  "ஸாய்ராம்" என்று நன்றி சொன்னாள்.

Sep 10, 2009

Worth a Click

Comments


Anuradha
Good story. Looking forward for more short stories.
11 Oct 2009 04:03 PM

Kannan
Good story with today's reality.
13 Sep 2009 12:57 PM

Subramanian
Good one...Where were you hiding Mr.Ramaswamy with such a fantastic skill of enlightening people with beautiful story writing... Kudos to Chennai Online for publishing upcoming brilliant writers articles.
10 Sep 2009 03:29 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MESHA MESHA : Today as a family head take charge and control of situations before others ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:18 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.