'நல்லி - திசைஎட்டும்' விருதுகள் - 2009

 'நல்லி - திசைஎட்டும்' விருதுகள் - 2009

சென்னையிலிருந்து துளசி கோபால்

நல்லி - திசைஎட்டும் மொழியாக்க விருது வழங்கும் விழா, சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் 09.08.2009 ஞாயிறு அன்று நடைபெற்றது. ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்குத் திசை எட்டும் விழாவை எட்டிப் பிடித்தேன்.

மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களில் சிறந்தவற்றுக்கு விருதுகள் வழங்கும் விழா, இது. 'திசைஎட்டும்' என்பது ஒரு காலாண்டிதழ். இதுவரை 23 இதழ்கள் வெளிவந்துள்ளன. இதன் ஆசிரியரான குறிஞ்சிவேலனும் மொழியாக்கத்திற்கான விருதினைப் பெற்றவர்தான். அது, 1994 வருடம் சாகித்ய அகாடமியிடமிருந்து. மலையாள மொழியில் இருந்து பல அரிய நூல்களைத் தமிழுக்கு மொழிமாற்றம் செய்திருக்கிறார்.

கலை, இலக்கியங்களில் ஆர்வமுள்ள  நல்லி குப்புசாமிச் செட்டி, இந்த இதழுக்கும், இவர்கள் வழங்கும் விருதுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் புரவலர் என்பதால் இந்த விழா ஏகப்பட்ட அருமையான அம்சங்களுடன் அழகாக நடந்தேறியது.

இந்த வருடம் பன்னிரண்டு நபர்களை இந்த விருதுக் குழுவினர் தெரிவு செய்துள்ளனர்.

ஏ.வி.சுப்ரமணியன், ஏ.ஜி. எத்திராஜுலு ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தமைக்காக 10 பேர்கள், நல்லி - திசையெட்டும் மொழியாக்க விருதுகளைப் பெற்றனர்.

டாக்டர் எம் பூபதி - முத்தொள்ளாயிரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.
 
டாக்டர் கோமதி நாராயணன் - ஆதவனின் 'காகித மலர்கள்' நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

ஸ்வாதி ஹெச். பத்மநாபன் - நீல. பத்மநாபனின் 'கூண்டினுள் பக்ஷிகள்' நூலைத் தமிழில் இருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

கி. இலக்குவன் - 'காந்திஜியின் இறுதி 200 நாட்கள்' நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

டாக்டர் ஜெயலலிதா - தமிழ் இலக்கண நூல் யாப்பருங்கலக் காரிகையைக் கன்னடத்தில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

டாக்டர் நாகூர் ரூமி - ஹோமரின் இலியட்டை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

சிங்கை ஜெயந்தி சங்கர்- ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சீனக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

பாவண்ணன் - 'ஓம் நமோ' என்ற கன்னட நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

டாக்டர் வை. கிருஷ்ணமூர்த்தி -  'ஆயுஸிண்டே புஸ்தகம்' என்ற நூலை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருது பெற்றார்.

கவிதாயினி மதுமிதா - பர்த்ரூஹரியின் 'சுபாஷிதம்' நூலை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்தமைக்காக விருது பெற்றார்.

மேலும் 'திருப்பூவணநாதர்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். இது ஒரு வரலாற்று நாடகம். எழுதியவர்:  கே.பி.சிவப்பிரகாசம்.

பிற்பகல் நடந்த விருதாளர்களுடன் சந்திப்பு என்ற கருத்தரங்கில் இந்த ஆண்டு விருது பெற்றவர்கள், தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட், இன்னும் மூன்று நூல்களை மொழிபெயர்த்தவர் எஸ்.ரா. தான் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கூட என்பதாலேயே பேச அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். மொழிபெயர்ப்பாளர்கள், நாடக நடிகர்கள் போன்றவர்கள் என்று ஆரம்பித்தார், மொழிபெயர்ப்பாளர்களை கிரியேடிவ் படைப்பாளிகளாகச் சிலர் எடுத்துக்கொள்ளாததைக் குறித்தும் எடுத்துச் சொல்லி இலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளர்களின் பணி  குறித்து, சிற‌ந்த‌ இடம் அவர்களுக்கு உண்டு என்றும் கூறினார்.

ஒரு படைப்பாளி ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறான் என்றால், ஏன் அதைப் பயன்படுத்தினான் என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் அறிந்து மொழிபெயர்க்க வேண்டும் என்று உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அதிக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம் எது என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன். அது கிறித்துவ மத வேதமான பைபிள்.. மொழியாக்கம் என்று நாம் உணரமுடியாத வகையில் அற்புதமாக அதை மொழிபெயர்த்தவர் ஆறுமுக நாவலராம். அதிலும் குறிப்பாக இறைவனை 'என் தேவனே' என்று குறிப்பிட்டதையும் குறிப்பிட்டுச் சொன்னார்.

மொழிபெயர்ப்பாளர்கள், மூலநூல் எழுதும் எழுத்தாளர்களுக்குச் சற்றும் குறைவில்லாத பெருமைகளைப் படைத்தவர் என்றும் குறிப்பிட்டார்.  எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் உள்ள 'லவ்' என்ற சொல்லுக்கு அன்பு, பிரேமை, விருப்பம், பிரியமே, நேசமே, அதிசயமே, அற்புதமே.....' இப்படி ஏராளமானத் தமிழ்ச் சொற்கள் உள்ளதென்பதைக் கோடி காட்டி, பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில் உள்ள திறமைகளை அடைந்துள்ள மொழிபெயர்ப்பாளர்களை வெகுவாகப் பாராட்டினார். ஆற்றொழுக்கு போன்ற அருமையான பேச்சு.

மாலை நிகழ்ச்சியாக, ஆறு மணிக்குக் குமாரி காயத்ரியின் பாட்டுக் கச்சேரி இருந்தது. ஏழு மணி அளவில் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஏ. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். 'திசை எட்டும்' ஆசிரியர் குறிஞ்சிவேலன், விருதுகள் பற்றிய அறிமுகத்தைத் தந்தார்.

மாலை நிகழ்ச்சியில் வங்க மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. அவரே ஏற்புரையும், விருது பெற்றவர்கள் சார்பாக நன்றியுரையும் வழங்கினார். இவர் 'நல்லி - திசைஎட்டும்' முதல் விருதைப் பெற்றவர் (2004) என்பது தனிச் சிறப்பு.

மாண்பமை நீதியரசர் ஏ. ஆர். லட்சுமணன், தமிழ் மொழியுடனும் இலக்கியங்களுடனுமான தொடர்புகளை அவருக்கே உரித்தான முறையில் அருமையாக உரை ஆற்றினார். தில்லியில் அவருக்கு இந்தி கற்றுக் கொடுக்க நடந்த ஏற்பாடுகளையும், கடைசியில் அவர் எப்படி அவர்களை எல்லாம் தமிழ் பேச வைத்துவிட்டார் என்றும் சொன்னதைக் கேட்டு கூட்டத்தில் ஆரவாரமான சிரிப்பொலி எழுந்தது! விருது பெற்றவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, விருதுகளை வழங்கினார்.

வெல்லப் பிள்ளையாருக்கு, அவரையே கிள்ளி நைவேத்தியம் செய்வதைப் போல பொன்னாடைகள் வழங்கிய நல்லி குப்புசாமி செட்டியாருக்கே பொன்னாடை போர்த்தினார்.

இந்தப் புத்தகங்களின் மூல நூல்களை எழுதியவர்களுக்கும், சிறப்பான முறையில் இவற்றை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் மயிலோடு நிற்கும் முருகன் சிலைகள் வழங்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக விழாவுக்கு வந்திருந்த  அனைவருக்கும் (என் கணக்கில் ஒரு 600 விருந்தினர்கள் இருக்கலாம்) இலைபோட்டுச் சாப்பாடு என்று பெரிய விருந்தே வைத்துவிட்டார்கள். ஏதோ கலியாண வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்ட அனுபவமாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விருதுபெற்ற சாந்தா தத் சொன்னது..... 'இது நமக்கான விழா'.

உண்மைதானே!!!!

Aug 13, 2009

Worth a Click

Comments


V.Thiruvengadam
thamizhil mozhipeyarppu ilakkiyam vaLara nalla vaaippaaga indha nalli virudhu amaindhuLLadhu.esraa sonnadhaippola mozhipeyarppum ilakkiyame! vaLLal nalli vaazhga!
13 Aug 2009 07:02 PM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

SIMHA SIMHA : Today if you learn to look at things with a correct judgement , this would ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
12:14 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.