
ரமணன்
அழுதழுதே அழவேண்டாம் என்பதறிந்தேன் - தினமும்
அழுதுநின்ற நாட்களுக்காய் வெட்கமும் கொண்டேன்
தொழுதலொரு சடங்கில்லை தெரிந்துவிட்டது - என்றும்
துக்கம்பக்தி யாவதில்லை புரிந்துவிட்டது!
ஆற்றாமை அங்கலாய்ப்பு ஆவேசங்கள் - நம்
ஆணவனார் பூணுகின்ற திருட்டுமுகங்கள்
நாற்றத்தைச் சந்தனத்தால் மாற்றும் விதங்கள் - வெற்று
நாடகங்கள்! அதைநிறுத்தக் கரகோஷங்கள்!
போற்றுவாரின் கண்ணிலென்றும் பொன்னொளி மின்னும் - உள்ளில்
பொங்குகின்ற கங்கையொரு பூத்துளி மின்னும்!
ஏற்றனையே என்னையென்று விம்மிடும் சித்தம் - நன்றி
எவ்விதம்சொல் வேனென்றே ஏற்றிடும் முத்தம்!
அதுவு மிதுவும் வேண்டுமென்று அலைவது ஆசை - அது
ஆலயத்தில் மடிவிரிக்கும் மனமெனும் வேசை
இதில்நிதமும் நிகழ்வதெலாம் இச்சையின் பூசை - அதில்
இதயமில்லை பக்தியில்லை இறைவனுமில்லை.
ஆழ்மனத்தில் ஓசையின்றி வெடிகள் வெடிக்கும் - கடல்
அத்தனையும் வானெழுந்து தோகை விரிக்கும்
கீழ்விழாமல் விழிவிளிம்பில் கிளர்ந்து துடிக்கும் - இறை
கைதட்டிப் பாராட்டும் அதுவே உருக்கம்!
அடையவேண்டி அலைந்தபோது அழுகை வந்தது - இங்கே
அத்தனையும் பெற்றதென்று உருக்கம் வந்தது
தடம்புரண்ட குற்றவுணர்வு குமுறலானது – அருளின்
தன்மைகண்ட போதுயிரே தழுதழுத்தது!
சரணமெய்தல் தினம்நிகழ்த்தும் சடங்கில்லையே! உண்மைச்
சரணமெய்தி னோர்மனத்தில் கவலையில்லையே!
மரணமென்றும் ஜனனமென்றும் அல்லலென்றும் இன்பமென்றும்
மாறுவதால் உள்ளிலெந்த மாற்றமுமிலையே!
ஒன்றுயிரைத் தொட்டவேளை உள்விழித்தது – அதை
ஒருவிரலால் தொடநினைத்து உள்ளம் வெந்தது
நன்றும் தீதும் ஒன்றெனுமோர் ஞானம் வந்தது – அது
நாயகனின் முன்னிலையாம் மோனமானது – நாம்
ஒன்றும்செய்ய முடியாதென் றுணர்ந்த போதிலே
மொத்தவுயிரும் சத்தமின்றிக் குப்புற வீழும் – பெற்ற
நன்றிவந்து தாக்கும்போது நாவசையாது – அவன்
நட்டநடுவில் நகைக்கும்போது பூவசையாது!
அவனமைதி! அவன்திருப்தி! அவனானந்தம்! என்றும்
ஆனந்தத் தால்வருவது தானானந்தம்!
கவலைகளை விட்டுதறிக் கண்ணீர் சிந்து! அது
கங்கைவந்து நின்றுபாடும் காவடிச் சிந்து!
Sep 30, 2009
* Do not use semicolon(;)