திருவாரூர் ரேவதி
உடுத்திய ஆடையும்
உதட்டுப் புன்னகையும்
கொளுத்தும் சூரியனுக்குக்
குடைபிடிக்கும் வெண்கலமுமாய்
வறுமைக்குத் தோழியாய்
வாழ வந்தவளே!
வயதான மூதாட்டியே
காலம் முழுதும் - உன்
பாதத்தை முத்தமிட
பூமித்தாய் பட்டா
வாங்கியும் கூட
ஆகாய சூரியன் உனக்கு மட்டும்
கங்கையானதெப்படி?
பளிச்சிடும் வெயிலுக்கு
பரிச்சயப்பட்ட
உன் நரையின் பக்குவம்
உதட்டுக்கு நகையாய்
நிறம் மாறியதோ?
நாடி தளர்ந்தும்
நம்பிக்கை தளராது
காலமகள் கூறும் வயதைக்
கண்களால் மறுப்பவளே!
உன் வயிற்றுப் பசி தீர்க்க
சில நூறு வயிற்றினைச்
சில்லென்று சிலிர்க்க வைக்கும்
மோர்க் கிழவியே வாழி நீ!
-----------------------------------------------
ஓவியம்: தி. சின்னராஜ், மேட்டுப்பாளையம்
Jul 06, 2009
* Do not use semicolon(;)