தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நெடுந்தொடர் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் கெளரவிக்கும் வகையில் "சின்னத் திரை விருது" வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஒளிபரப்பான தொடர்களிலிருந்து 16 தொடர்களைத் தேர்ந்தெடுத்து, அதில் பல்வேறு துறைகளுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் விழாவை ஐ.டி.சி (ITC) நிறுவனத்தின் 'விவேல் சோப் மற்றும் ஷாம்பூ' ( Vivel Soap & Shampoo) வழங்குகிறது. இந்த விழாவை 'விஷன் புரோ இவென்ட் மேனேஜ்மென்ட்' (Vision Pro Event Management) வடிவமைத்துத் தயாரிக்க, 'காஸ்மிக் டவுன்' (Cosmic Town) இணைந்து வழங்குகிறது.
திரைப்பட இயக்குநர் எழில், இயக்குநர் மற்றும் வசனகர்த்தா இ.ராமதாஸ், ஒளிப்பதிவாளர் ரவீந்தர், இசையமைப்பாளர் சிற்பி, பாடலாசிரியர் காமகோடியான், நடன இயக்குநர் 'காதல்' கந்தாஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.
16 தொடர்களில் இருந்தும் சிறந்த நடிகர்கள் - நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள் - நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள் - நடிகைகள், வில்லன் நடிகர்கள் - நடிகைகள், புதுமுகம் ஆண் - பெண், சிறந்த பாடலாசிரியர், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நடன இயக்குநர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த முகப்புப் பாடல், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த தயாரிப்பு நிறுவனம் ஆகிய விருதுகளும் சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றும் வழங்கப்பட உள்ளது.
இதில் ஒவ்வொரு துறையில் இருந்தும் மூன்று நபர்கள் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அவர்களில் யார் விருதைப் பெறுவார்கள் என்று, 2009, நவம்பர் 14ஆம் தேதியன்று சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் விருது வழங்கும் விழாவில்தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்குபெறும் இவ்விருது வழங்கும் விழா, 'கே' தொலைக்காட்சியில் 2009, நவம்பர் 22ஆம் தேதி முதல், காலை 10 - 10.30 மணிக்கு நான்கு பகுதிகளாக ஒளிப்பரப்பாக உள்ளது.
Nov 07, 2009
* Do not use semicolon(;)