'காதல்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சந்தியாவுக்கு, தற்போது தமிழ்த் திரையுலகில் பின்னடைவுதான். அவர் நடித்த எந்தப் படமும் சரியாகப் போகாததால் பட வாய்ப்புகளும் இல்லை. இப்போது அந்த நிலையை மாற்ற வருகிறது 'ஓடிப் போலாமா'.
'ஸ்ரீவாரு பிலிம்ஸ்' என்ற திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'ஓடிப் போலாமா'. இதில் புதுமுகம் பரிமள் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மறைந்த பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.பாலனின் பேரனும் நடிகை சங்கீதாவின் சகோதரனும் ஆவார்.
பரிமளுக்கு ஜோடியாகச் சந்தியா நடிக்கும் இப்படத்தை "ஆஹா என்ன அழகு' படத்தை இயக்கிய கண்மணி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
காதலித்தவர்கள் ஓடிப் போவதைத்தான் இதுவரை திரைப்படங்களிலும், நிஜத்திலும் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலிக்காத இருவர் ஓடிப் போய்த் திரும்பும்போது ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்வதுதான் இந்தப் படத்தின் கதை. இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் தயாராகிறது.
அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. அதில் இருந்து படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. இந்தப் படம் வெளியான பிறகு சந்தியா, தனது பழைய நிலையை மறுபடியும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2009, நவம்பர் மாத இறுதியில் படம் வெளியாகும் என்கிறார் இயக்குநர் கண்மணி.
Nov 03, 2009
* Do not use semicolon(;)