நாகை வை. ராமஸ்வாமி
பூ விரிந்து வாசமிடும் பூபாள நேரம்
புள்ளினம் பாட்டிசைத்து பண் பாடும் வானம்
புன்னகைத்துப் பகலவன் இருளகற்றும் வேளை
பாவையே நீலாயதாக்ஷி திருப்பள்ளி எழுவாயே!
மங்கல இசை நாதம் மாதா உனை எழுப்பிட
செங்கமலத் திருப்பாதம் பூதேவி வருடிட
தங்க மலர் கொண்டுன்னை தரிசிக்க வந்தோமே
மங்களம் பொங்கிட நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!
வண்டினம் சேர்க்கும் அமுதொக்கும் மதுவும்
ஆவினம் அருளும் புனிதமிகு பாலும்
நேசமுடன் வாசமிகு அமுத நீரும் வைத்தோம்
நீராட நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!
விண்ணவர் மண்ணவர் வியந்துநின் பார்வை பெற
பண்ணொடு பாசுரம் வேதமும் ஓதி நிற்க
வண்ணமிகு வாசமலர் சூட்ட வந்தோம்
கண்ணழகுத் தாயே நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!
காயாரோகணன் காயத்தில் கலந்தவள் நீ
மாயப் பிறப்பின் மயக்கம் அறுப்பவள் நீ
சேயெங்கள் துயரம் துடைப்பவள் நீ
தூயவளே நீலாயதாக்ஷி பள்ளி எழுவாய் நீ!
உயிரின் காற்றை உன்னகம் கொண்டவளே
உயிரினம் அனைத்தும் உள்ளம் குளிர்ந் துய்வுற
உய்ய நின் பாதம் போற்றிப் மகிழ்ந்திட
உயர்ந்தவளே நீலாயதாக்ஷி, பள்ளி எழுவாயே!
தேடித் தேடி வந்தோமே தேவி நின் தாள் பணிய
ஓடி ஓடி வந்தோமே நின்னருள் பெற்றிட
வாடி வாடி நிற்குமெங்கள் வேதனை களைந்திட
கோடிகோடி நமஸ்காரம் நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!
=====================================
Oct 14, 2009
* Do not use semicolon(;)