வட இந்தியாவில் தீபாவளி

 வட இந்தியாவில் தீபாவளி

விசாலம்

தீயென அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாள், இந்தத் தீபாவளிப் பண்டிகை. தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் விளக்குகளின் வரிசை எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் பண்டிகை ஒரு தேசியத் திருநாளாக விளங்குகிறது. இந்தியா முழுவதும்இதைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல் சில அயல் நாடுகளும் கொண்டாடுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு காரணம் கொண்டு இதைக் கொண்டாடுகின்றன. அங்கு சடங்குகளும் சற்று மாறுபடுகின்றன ஆனால் பொதுவாக எல்லோரும் தீபங்கள் ஏற்றுகின்றனர்.

அஸாம் மாகாணத்தில் மகாலட்சுமியை வழிபட்டுப் பூஜிக்கின்றனர். அந்த மாகாணத்தில் பிரமபுத்ரா நதி வளைந்து நெளிந்து ஓடும் அழகும்
வனப்புமிக்க மலைப்பிரதேசத்தில் தேயிலைச் செடிகளும் அதைப் பறிக்கும் பெண்களின் வரிசைகளும் பார்த்தால் அங்கு இயற்கையின் ஐஸ்வர்யம் பொங்குவதைக் காண்கிறோம். இங்கு தீபாவளி நாளில் புதுக்கணக்கு ஆரம்பிக்கின்றனர். புதிய தொழில் தொடங்கும் நாளாகக் கருதுகின்றனர். எங்கும் மாவிலைத் தோரணங்கள், அழகாக பலவித அமைப்புகளில் தயாரிக்கப்பட்ட சிமிழ் விளக்குகளும் ஒவ்வொரு வீட்டையும் அலங்கரிக்கின்றன.

இப்போது ஹிமாசலப்பிரதேசத்தின் தீபாவளியைப் பார்க்கலாம். இங்கு இருக்கும் மக்கள் பலவித மண்பாண்டங்களில் பலவித வர்ணங்கள் பூசி அழகுபடுத்துகின்றனர். பின் ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்கின்றனர். பின் அந்த மண்பாண்டங்களைப் பரிசாகக் கொடுக்கின்றனர்.    அரிசி மாவினால் அழகான கோலங்கள் வரைந்து, இரவில் அந்தக் கோலத்தில் தங்கள் தெய்வத்தைப் பூஜிக்கின்றனர். பின் ஒரு தாமிரத் தட்டில் சந்தனத்தால் ஆன லட்சுமிதேவி உருவத்தை வைத்து வழிபடுகின்றனர். இதனால் திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் கூடிவருகிறதாம்.

ராஜஸ்தானில் தீபாவளி என்றால் ஒட்டகத்தின்  வரிசைகள், யானையின் வரிசைகள் ஆகியவற்றைக் காணலாம். இராமர், இராவணனை வென்று வெற்றியுடன் திரும்புவதே இந்தத் தீபாவளி என்று மக்கள் கருதுகின்றனர். ஒட்டகங்களின் அலங்காரமும் யானைகளின் அலங்காரமும் பிரமிப்பாக இருக்கிறது. பின் அவர்கள் சிறிய மண்ற்குன்றுகளின் மேல் தீபங்களை ஏற்றுகின்றனர். அதன் பின் ஒட்டக, யானை ஊர்வலத்துடன் ராஜ பரம்பரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் வருகின்றனர். ராஜஸ்தான் பெண்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் போன்ற வர்ணங்களில் அவர்களது பாரம்பரிய உடைகளை அளிந்து மகிழ்கின்றனர். பசுக்களுக்கு திலகமிட்டு பூஜையும் செய்கின்றனர்.

ஒரிஸ்ஸாவில் ஒரியர்கள் தீபாவளி கொண்டாடுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது. நமது மஹாளய தினங்களில் நாம் முன்னோர்களை நினைத்துப்  படையல் வைப்பதுபோல் இவர்களும் இன்றைய தினத்தில் முன்னோர்களை நினைத்து, அவர்களின்  ஆவிகளை அழைத்து, அவர்களது ஆன்மா சாந்தியாகத் தேவையானதைச் செய்கின்றனர். மாலை, இரவு வரும் வேளையில் குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களும் கூடுகின்றனர்.

பின் பல வர்ணங்களில் ஒரு பாய்மரப் படகு போன்ற சித்திரத்தை வரைகின்றனர். அதன் மேல் ஏழு அடுக்குகள் வைக்கின்றனர். ஒவ்வொரு அடுக்கிலும் வஸ்த்ரம் மஞ்சள் உப்பு கடுகு கொடிகள் சில வேர்கள் ஆகியவற்றை அடுக்கி வைக்கின்றனர். பின் நடுவில் இருக்கும் அடுக்கில் பிரசாதம் வைக்கின்றனர். பின் துணியுடன் சணல் தண்டுகள் சுற்றப்பட்டு ஒரு பெரிய திரிப்போல் அதனுடன் இணைத்து வைக்கின்றனர். பின் எல்லோரும் சேர்ந்து மந்திரகோஷம் எழுப்பி, மூதாதையர்களின் ஆவியின் பெயரைச் சொல்லி அழைக்கின்றனர். பின் அந்தச் சணல் திரியை
ஏற்றுகின்றனர். அந்தச் சோதி எரியும் அழகும் மந்திரமும் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றன.

போலோ சத்நாம் சத்ஸ்ரீஅகால் என்ற கோஷம் கேட்க, பஞ்சாபில் நுழைகிறோம். பஞ்ச நதிகள் கொண்டதால் பஞ்சாப் என்று அழைக்கப்பட்ட இதில் சீக்கியர்களும் பஞ்சாபியர்களும்ஸ்ரீகுரு கிரந்த சாஹேப்பைத் தங்கள் குருவாக எண்ணி வழிபடுகின்றனர். கிபி 1619 வரை அவர்கள் வாழ்வில் தீபாவளி பண்டிகை இருந்ததில்லை. ஆனால் அவர்களின் ஆறாம் குரு குவாலியர்கோட்டையில் அடைக்கப்பட்டு, தீபாவளி தினத்தில் விடுதலை செய்யப்பட்டார். அந்த வருடம் அவர் வரவுக்காக தீபங்கள் ஏற்றப்பட்டன. அதிலிருந்து அவர்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளிக்கு முதல் நாள் லட்சுமி தேவியை வழிப்பட்டு அவள் உள்ளே வர எல்லாக் கதவுகளையும் திறந்து வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கதவு திறந்திருப்பதால் அவர்களும் தூங்காமல் தீன் பத்தா என்ற சீட்டு விளையாட்டு விளையாடி, இரவைக் கழிக்கின்றனர். தீபாவளிக்கு மறுநாள் 'டிக்கா' என்று ஒரு கொண்டாட்டம். காவியும் அரிசியும் கலந்து, சகோதரிகள் சகோதரர்களின் நெற்றியில் இட்டு, அவர்கள் சௌபாக்கியத்திற்காக பிரார்த்திகின்றனர். வீட்டு வாசல் முன் வர்ணக் கோலங்களும் போடுவது உண்டு.

மும்பய் ஒரு வியாபார ஸ்தலம். ஆகையால் அங்கும் கணபதிக்கும் இலட்சுமிக்கும் பூஜை நடத்தப்படுகிறது. அங்கிருக்கும் மஹாலட்சுமி கோயிலில் சிறப்பு ஆராதனை நடக்கும். தீபாவளி அன்று காலை 'உடன்' எனப்படும் சிறப்பு நறுமண எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்து, நண்பர்கள் வீட்டிற்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று வெகுமதியும் கொடுத்து வருகின்றனர். எல்லோர் வீட்டு வாசலிலும் நட்சத்திரம் போன்ற அட்டையில் செய்த விளக்கு எரியவிடப்படுகிறது அதை மேலும் மெருகாக்க, கண்ணாடி போன்று பேப்பர் சிவப்பு நிறத்தில் மூடப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சி மிகவும் ரம்யமாக இருக்கிறது. தவிர ஒவ்வொரு வீட்டு வாசலையும் போட்டி போட்டுக்கொண்டு ரங்கோலி அலங்கரிக்கிறது. சிறந்தவற்றுக்குப் பரிசும் கொடுக்கிறார்கள்.

பீஹாரில் தீபாவளிக்கு இரு நாள் முன்பே தன்வந்திரி பகவானுக்கு 'தன்தெரஸ்' என்ற விழா நடைபெருகிறது. பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும்
கடைந்தபோது ஒரு கலசத்துடன் வெளிப்பட்டவர் தன்வந்திரி. தீபாவளிக்கு முதல் நாள் 'சோட்டி தீபாவளி' என்று கொண்டாடுகின்றனர். இவர்களும் லட்சுமி வீட்டில் நுழைவதுபோல் அரிசி மாவினால் படம் வரைகின்றனர்; பின் பட்டாசுகளும் வெடிக்கின்றனர். பீஹார் மக்கள், தீபாவளியன்று துளசிச்செடி முன் படையல் இடுகின்றனர். தீபாவளிக்கு ஒரு வாரம் பின் சூரியநாராயணரை 'சஹத்' எனும் விழா மூலம் கொண்டாடுகின்றனர்.

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இந்தத் தீபாவளித் திருநாளை வழிபட்டாலும் அஞ்ஞான இருளை அகற்றி, ஒளிமிகு நல்வாழ்வு அமைய, எல்லோரும் ஒருமனதாய் பிரார்த்திக்கின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடும் இந்தப் பண்டிகை, மனத்தில்
களிப்பும் புத்துணர்ச்சியும் அளிக்கிறது.

Oct 14, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

VRICHIKA VRICHIKA : If you have your strategy as a mix of prudence and practical approach then ...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.