ஜோதிடர் திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி
ஆத்ம ஞானம் ஒன்றே "ஞானம்" என்ற பதத்தினால் குறிக்கப்படுகிறது. இந்த ஞானத்தை
அடைய சாஸ்திரங்கள் உதவி செய்கின்றன. அவற்றுள் முக்கியத்துவம் பெற்றவை ஆறு
வேதாங்கங்கள். அவற்றின் நடுவே எப்போதும் ஜோதியைப் பரப்பிக் கொண்டிருப்பது
ஜோதிஷம். இந்த ஜோதிஷத்தைப் பற்றி அறியும் பாக்கியத்தைத் தந்தது பாரம்பரியம்.
ஜோதிட பாரம்பரியம்: காஞ்சி மகாமுனிவரின் சமஸ்கிருத குருவாகத் திகழ்ந்த
தண்டாங்கோரை சுப்பையா தீட்சிதர் அவர்களின் வம்சாவழி வந்தவர் நம் ஜோதிடர்
காயத்ரி பாலசுப்பிரமணியன். தகப்பனார் தெய்வ யக்ஞ ரத்னா ஜோதிடக் கடல்
எஸ்.வைத்தியநாதன். இந்திய ராணுவத்தில் ராடார் எஞ்சினியராகப் பணியாற்றியவரை
ஜோதிடம் ஈர்த்தது. காஞ்சி மகாமுனிவரின் அருளாசியோடு நாற்பது ஆண்டுக் காலம்
திருச்சி மாநகர் தில்லை நகரில் ஜோதிட சேவையும், பத்தாண்டுக் காலம் ஜோதிடக்
கடல் என்ற மாத பத்திரிகையும், ஸ்ரீ பாதுகா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகத்தையும்
நடத்தி வந்தவர். அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் போன்ற உலகின் பல
பகுதிகளுக்குச் சென்று ஜோதிட சேவை புரிந்தவர். .
ஜோதிடரின் கல்வித் தகுதி: தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற காயத்ரி
பாலசுப்பிரமணியன், இதழியல் துறையில் பட்டயம் பெற்றவர். பாண்டிச்சேரி அட்சயா
அளித்த 'திருக்கணித மேதை' பட்டமும் திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ
சித்தாந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சித்தாந்த நன்மணி பட்டமும் பெற்றார்.
1994 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் தகப்பனாரின் வழிகாட்டுதலோடு பெற்ற
ஜோதிட அனுபவம், பாண்டிச்சேரி அட்சயா 2006-2007 பஞ்சாங்கம் என்ற முதல் படைப்பாக
மலர்ந்தது. இதர படைப்புகள்:
1. 2006-07 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மற்றும் 2007ஆம் ஆண்டுக்கான 12
ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் தனிப் புத்தகமாக, சென்னை கிரி
டிரேடிங் ஏஜென்ஸி மூலம் வெளியிடப்பட்டது.
2. ஜோதிட அரசு இதழில் 2008க்கான ராகு-கேது பெயர்ச்சிப் பலன்கள்; 2008-09
ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்; 2009-2011 ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி
பலன்கள் ஆகியவை தனித் தனிப் புத்தகங்களாக வெளியாயின.
பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம்: இலங்கையிலிருந்து வெளிவரும் 'வீர கேசரி'
என்ற தினசரி பத்திரிகை ஆரம்பித்த 'சோதிடகேசரி' என்னும் மாத ஜோதிடப்
பத்திரிகையின் பிரதான சோதிடராக 13 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
மூலிகை மணி மற்றும் ஜோதிட அரசு பத்திரிகைகளில் பல ஜோதிடக் கட்டுரைகள் வெளி
வந்துள்ளன. தற்பொழுது ஜோதிட அரசு இதழில், மாதாந்திர ராசி பலன்களை எழுதிக்
கொண்டுள்ளார். நிலாச்சாரல்.காம், இணைய தளத்திலும் வாராவாரம் ஜோதிடக்
கேள்விக்கான பதில்களை அளித்துக்கொண்டு வருகிறார். அஸ்ட்ரோ டைமர்ஸ் டாட்
காமின் பிரதான ஜோதிடராக உள்ளார். மேலும் சில இணைய தளங்களுக்கும் ஜோதிட ஆலோசனை
வழங்கி வருகிறார்.