புது தில்லி, மே 15 (டிஎன்எஸ்)
நாடெங்கிலும் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தல், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளை மே 16 அன்று அறிவிக்க, அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மணிக்கு ஒரு முறை ஒலிபரப்பப்படும் சிறப்புச் செய்தி அறிக்கையுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இரண்டு சிறப்பு இருமொழி நிகழ்ச்சிகள் புது தில்லியில் இருந்து ஒலிபரப்பப்பட உள்ளன.
காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி நடைபெறும் சிறப்பு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் தேர்தல் முடிவுகள், போக்குகள், முடிவுகளின் அலசல், எதிர்வினைகள் உள்ளிட்டவை இடம் பெறும். தில்லி வானொலி நிலையத்திலிருந்து வல்லுனர்கள், அரசியல்வாதிகள், சிறப்பு அழைப்பாளர்கள், நாடெங்கிலும் உள்ள அகில இந்திய வானொலி செய்தியாளர்களுடனும், அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாட உள்ளனர்.
இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒலிபரப்பப்படும் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பொது மக்கள் பங்கேற்று, தொலைபேசி வாயிலாக தமது கருத்துகளைக் கூறலாம். தொலைபேசி எண் 011-2371 707.
முதன் முறையாக இந்த நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலியின் இணையதளத்தில் நேரடியாக இடம் பெறவுள்ளன. வானொலியைக் கேட்க இயலாதவர்கள் குறிப்பாக, அயல்நாடு வாழ் இந்தியர்கள் இணையதளத்தில் இந்த நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.
அகில இந்திய வானொலியின் பிராந்திய சேவை பிரிவுகளும் சுமார் 75 மொழிகளில் தேர்தல் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்துள்ளன.
(டிஎன்எஸ்)
May 15, 2009
* Do not use semicolon(;)