சென்னை, மே 20 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடந்தது. சென்னையில் அரசு பேருந்து பெட்ரோல் குண்டுவீசி எரிக்கப்பட்டது.
சென்னை உட்பட தமிழகத்தில் கடலூர், சேலம் என பல ஊர்களில் 22 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இலங்கையில் நடந்து வந்த சண்டையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்புலி தலைவர் சூசை, அரசியல் பிரிவு தலைவர் நடேசன், தலைமை செயலக தலைவர் புலித்தேவன், போலீஸ் பிரிவு தலைவர் இளங்கோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 18 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்தது.
பிரபாகரன் மற்றும் அவரது சகாக்கள் மரணம் அடைந்த தகவல் வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. கடைகள் அடைக்கப்பட்டன. பல இடங்களில் பஸ்களின் மீது கல்வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். பல இடங்களில் பஸ்கள் ஓடவில்லை.
சென்னையில் பேருந்து எரிப்பு
சென்னை புழல் காவாங்கரை அருகே நேற்று மாலை 63/4 மணி அளவில் திடீரென அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர் தங்களுக்கு சாமான்கள் வாங்க வேண்டும் என்று கூறி, முகாமை விட்டு வெளியே வந்து சாலையில் திரண்டனர். அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், ராஜபக்சேவை கண்டித்தும் கோஷம் போட்டனர். பின்னர் செங்குன்றத்திலிருந்து சென்னை நோக்கிச்சென்ற அரசு பேருந்துகளை மறித்து, ஒரு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கினர். உடனே அந்த பஸ்சில் இருந்த சுமார் 40 பயணிகள் இறங்கி அலறியடித்து ஓடினார்கள். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்தன.
பின்னர் அந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய பஸ் உள்பட 3 பேருந்துகளின் கண்ணாடிகளை கல்வீசி அடித்து, உடைத்தனர். இதில் பஸ்களின் முன்பக்க, பின் பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.
இதுபற்றிய தகவல் கிடத்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் வந்து எரிந்து கொண்டிருந்த பேருந்தை அணைத்தனர்.
தகவல் கிடைத்து புழல் போலீஸ் உதவி கமிஷனர் சிவகாம்பிகை செல்வன், இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, ரவி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பஸ் எரிப்பு, உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக புழலில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய நபர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் 13 பேருந்துகளின் மீது கல் வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்ததாக அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் விருத்தாசலம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தாக அதிகாரி ஒருவர் கூறினார்.
சேலம்
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ராஜபக்சேவை கண்டித்தும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற அரசு பேருந்தின் மீது சிலர் கல் வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதே போல ஆடைஞ்ரில் இருந்து சேலம் வந்த டவுன் பஸ் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. டவுன் பஸ் டிரைவர் ராமேஸ்வரன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 25 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடந்த போது சேலம் புதிய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள ஒரு பேக்கரி மீதும், ஆட்டோ மொபைல்ஸ் கடை மீதும் கற்கள் வீசப்பட்டன. இதனால் அந்த கடைகளின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. அதே போல அந்த வழியாக சென்ற கார் மீதும் சிலர் கல் வீசினார்கள். இதில் அந்த காரின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
இந்த சம்பவங்கள் காரணமாக சேலம் புதிய பஸ் நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
இலங்கை பிரச்சினையில் ஐ.நா.சபை உடனடியாக தலையிட வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலைக்கு முயற்சி
இந்த போராட்டத்தின்போது 2 மாணவர்கள் தற்கொலை செய்ய போவதாக கூறி மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்றனர். அவர்களை சக மாணவர்கள் காப்பாற்றினார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சட்டக்கல்லூரி அருகே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கொடும்பாவி எரிப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ராஜபக்சேவின் கொடும்பாவியை ஒரு கும்பல் எரித்து, ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தஞ்சை, திருவாரூரில்
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை சென்ற டவுன் பேருந்து ஒன்றை புளியம்பட்டி அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் இரவு 101/2 மணி அளவில் வழிமறித்து கல்வீசி தாக்கியது. இதே போல கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி சென்ற ஒரு பேருந்தை மருதாநல்லூர் அருகே ஒரு கும்பல் நேற்று முன்தினம் கல்வீசி தாக்கியது.
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பேருந்தும் இதே போல நேற்று முன்தினம் ஒன்பதுபுள்ளி என்ற கிராமம் அருகே தாக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை சென்ற ஒரு பஸ் பண்டாரவாடை அருகே வழி மறித்து தாக்கப்பட்டது. இதில் 4 பஸ்களின் கண்ணாடிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் ஒரு பயணியும் காயம் அடைந்தார். (டிஎன்எஸ்)
May 20, 2009
* Do not use semicolon(;)